விருதுநகர் கிழக்கு மாவட்ட பாஜ தலைவர் பாண்டுரங்கன். இவர் கடந்த சட்டமன்ற தேர்தலில் விருதுநகர் தொகுதியில் பாஜ சார்பில் போட்டியிட்டு தோல்வியைத் தழுவினார். வரும் தேர்தலில் மீண்டும் விருதுநகர் தொகுதியில் போட்டியிடுவதற்காக களப்பணியாற்றி வந்தார். இந்நிலையில் சாத்தூர் தொகுதியில் பாஜ மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் போட்டியிட உள்ளதாக அறிவிப்பு வௌியானது. ஏற்கனவே திருநெல்வேலியில் போட்டியிட்ட நயினார் நாகேந்திரன் தற்போது விருதுநகர் மாவட்டத்திற்கு போட்டியிட வந்ததால் விருதுநகர் தொகுதி பாஜவிற்கு ஒதுக்கப்படவில்லை. அதிருப்தியில் இருந்த பாண்டுரங்கனின் ஆதரவாளர்கள் நேற்றிரவு மாவட்ட பாஜ அலுவலகத்தில் திரண்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்து அலுவலகம் வந்த பாண்டுரங்கன் அவர்களுடன் ஆலோசனை நடத்தினார். அவர்களை சமாதானம் செய்து அங்கிருந்து கலைந்து போக செய்தார்.
இதுகுறித்து பாஜ கிழக்கு மாவட்ட தலைவர் பாண்டுரங்கன் செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘‘தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நாள் முதல் வேலை பார்த்து வந்தோம். விருதுநகர் தொகுதி பாஜவுக்கு ஒதுக்கப்பட்டால் கண்டிப்பாக வெற்றி பெறலாம் என நிர்வாகிகளிடம் ஒரு நம்பிக்கை இருந்தது. விருதுநகர் பாஜவுக்கு ஒதுக்கப்படாததால் ஆதங்கம் இருந்தது. அதிமுகவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் எனக்கு மகிழ்ச்சி தான். எங்கள் நிர்வாகிகள் இதுகுறித்து என்னை சந்தித்து பேச விரும்பினர். நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தப்பட்டது. தேர்தல் காலம் மிக குறைவாக உள்ளது. எனவே ஒவ்வொருவரும் களப்பணியாற்றி கூட்டணி கட்சிகளுக்கு வாக்குகளை பெற்று தர வேண்டும் என முடிவு செய்யப்பட்டது’’ என்றார்.
பாஜ நிர்வாகிகள் கூறுகையில், ‘‘மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தனது சுயநலத்திற்காக விருதுநகர் தொகுதியை கைகழுவி விட்டுள்ளார். ஏற்கனவே வெற்றிபெற்ற நெல்லையில் மீண்டும் போட்டியிட நயினாருக்கு என்ன தயக்கம்? மாவட்ட தலைவர் பாண்டுரங்கன் கடந்த சில ஆண்டுகளாகவே விருதுநகர் தொகுதியை குறி வைத்து தீவிர களப்பணியாற்றி வந்தார். பாஜவை மக்களிடம் கொண்டு சேர்க்கும் வகையில் பல்வேறு நிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்து நடத்தியுள்ளார். இவர் விருதுநகர் தொகுதியில் போட்டியிடாததது வருத்தமாக உள்ளது’’ என்றனர்.
