தேர்தல் பணியில் ஈடுபடும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு மட்டுமே தபால் வாக்குரிமை இருந்தது. இதேபோல், ரயில்வே தொழிலாளர்களுக்கும், அத்யாவசிய பணியில் இருப்பவர்களுக்கு வழக்கப்படும் தபால் வாக்குரிமை வழங்கி உத்தரவிடப்பட்டது. ஆனால், தமிழ்நாடு மற்றும் கேரளத்தில் பணிபுரியும் ரயில்வே ஊழியர்களுக்கு தபால் வாக்குரிமை இதுவரை வழங்கப்படவில்லை. இதனால், தேர்தல் நாளன்று பணிபுரியும் ரயில் ஓட்டுநர்கள், உதவி ஓட்டுநர்கள், வண்டி மேலாளர் மற்றும் ஓடும் ரயிலை சார்ந்து பணிபுரியும் அனைத்து ஊழியர்களும் தங்களது வாக்கு செலுத்த முடியாமல் உள்ளது. தற்போது அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்களுக்கு தபால் வாக்கு உரிமை கொடுத்துள்ளனர்.
இதைப் போல தமிழ்நாடு மற்றும் கேரள மாநில ரயில்வே ஊழியர்களுக்கும் தபால் வாக்களிக்க அனுமதி வழங்க வேண்டும் என தொழிற்சங்கத்தினர் தேர்தல் ஆணையத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர். டிஆர்இயூ கோட்ட ஒருகிணைப்பாளர் சங்கரநாராயணன் கூறுகையில், ‘‘சட்டமன்ற தேர்தலில் ரயில்வேயில் பணிபுரியும் தொழிலாளர்கள், டிக்கெட் பரிசோதகர்கள், ஓடும் ரயில் சார்ந்த ஊழியர்கள், மற்ற பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் அத்யாவசிய ஊழியர்கள் பணியாளர்கள் அனைவருக்கும் தபால் வாக்கு உரிமை வழங்க வேண்டும். தமிழக மற்றும் கேரள ரயில்வே ஊழியர்களுக்கு மட்டும் தொடர்ந்து தபால் வாக்கு மறுக்கப்படுவது எந்த வகையில் நியாயம்? ஒன்றிய தேர்தல் ஆணையத்துடன் இணைந்து மாநில தேர்தல் ஆணையம் ரயில்வே ஊழியர்களுக்கு தபால் வாக்கு உரிமையை பெற்று தர வேண்டும் என கோரிக்கை மனு அனுப்பி இருக்கிறோம்’’ என்றார்.
* அமைச்சர்கள் தொகுதியா? தெறித்து ஓடும் அதிமுகவினர்
விருதுநகர் மாவட்டத்தில் சாத்தூர், சிவகாசி, திருச்சுழி, அருப்புக்கோட்டை, விருதுநகர், ஸ்ரீவில்லிபுத்தூர் (தனி), ராஜபாளையம் ஆகிய 7 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. இதில் அதிமுக கூட்டணியில் சாத்தூர் தொகுதி பாஜவிற்கும் ராஜபாளையம் தொகுதி ஜான் பாண்டியன் கட்சிக்கும் ஒதுக்கப்பட்டுள்ளன. சிவகாசியில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். மீதம் திருச்சுழி, அருப்புக்கோட்டை, விருதுநகர், ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதிகள் உள்ளன. இதில் விருதுநகர், ஸ்ரீவில்லிபுத்தூர் தொதிகளுக்கு மட்டுமே அதிமுகவினர் ஆர்வம் காட்டுகின்றனர். திருச்சுழி, அருப்புக்கோட்டை தொகுதிகளின் பக்கம் செல்ல தயக்கம் காட்டி வருகின்றனர். காரணம் சிட்டிங் அமைச்சர்கள் கேகேஎஸ்எஸ்ஆர்.ராமச்சந்திரன் அருப்புக்கோட்டை தொகுதியிலும் தங்கம் தென்னரசு திருச்சுழி தொகுதியிலும் களமிறங்க உள்ளனர். அமைச்சர்கள் மக்கள் செல்வாக்குடன் தொகுதியில் அபார பலத்துடன் இருப்பதால் நமக்கு தோல்வி நிச்சயம்.. எதற்கு வீணாக பணம் செலவு செய்ய வேண்டும் என ஒதுங்க ஆரம்பித்து விட்டனர்.
* சாத்தூர் தொகுதியில் போட்டி: லீக் அவுட் பண்ண நயினார்
தமிழ்நாடு பாஜ மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், நேற்று கன்னியாகுமரி வந்தார். அங்கு கன்னியாகுமரி பகவதியம்மன் கோயிலில் சாமி தரிசனம் செய்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: போர் சூழல் நேரத்திலும் கூட பிரதமர் மோடி உத்தரவின் பேரில் ஒன்றிய அரசு பெட்ரோல் டீசல் மீதான கலால் வரியை ரத்து செய்துள்ளது. இதே போல் தமிழக அரசும் வரியை ரத்து செய்ய வேண்டும். பெண்களை இழிவாக பேசும் திமுகவினர் மீது முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும். பா.ஜ. முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை, தேர்தலில் நிற்பது தொடர்பாக தலைமை தான் முடிவு செய்யும். தேசிய ஜனநாயக கூட்டணிக்கு, இனி வேறு ஏதும் கட்சிகள் வர வாய்ப்புள்ளதா என்ற கேள்விக்கு என்னால் கருத்து கூற முடியாது.
தேர்தலில் தொகுதி ஒதுக்கீடு என்பது பரஸ்பரம் பேசி முடிவு செய்யப்பட்ட ஒன்றாகும். சில இடங்களில் அவர்களுக்கு அதிகமாக கிடைத்துள்ளது. சில இடங்களில் எங்களுக்கு அதிகமாக கிடைத்துள்ளது. அதிமுக தொகுதிகளை பாஜ பறித்து உள்ளது என்பது அவதூறு பிரசாரம். இது போன்ற வதந்திகளை பொதுமக்கள் நம்ப வேண்டாம். குமரி மாவட்டத்தில் மட்டும் அதிக தொகுதிகளை கேட்டு வாங்கி விட்டோம் என கூறுவது சரி இல்லை. எங்கள் கூட்டணியில் யார் வெற்றி பெற்றாலும் முதலமைச்சர், எடப்பாடி பழனிசாமி தான். எங்கள் கட்சியின் வேட்பாளர் பட்டியல் விரைவில் வரும். நான் சாத்தூரில் போட்டியிடுகிறேன். இவ்வாறு அவர் கூறினார். பாஜ சார்பில் இன்னும் வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படவில்லை. இந்த தேர்தலில் அதிமுக கூட்டணியில் 27 தொகுதிகளில் பாஜ போட்டியிடுகிறது. முதல் வேட்பாளராக சாத்தூரில் நயினார் நாகேந்திரன் போட்டி என்பதை அவரே நேற்று அறிவித்து உறுதிப்படுத்தி உள்ளார்.
