பெருமாள் கோயில்களில் திருக்கல்யாண உற்சவம்

தர்மபுரி, மார்ச் 28: தர்மபுரி எஸ்.வி.ரோடு அபய ஆஞ்சநேயர் கோயில் சார்பில், 70வது ஆண்டு ஸ்ரீராம நவமி விழா நேற்று நடந்தது. இதையொட்டி அதிகாலையில் அபய ஆஞ்சநேயருக்கு பல்வேறு திரவியங்களால் அபிஷேகங்கள் நடந்தது. காலை 6 மணி முதல் அபய ஆஞ்சநேயருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு விசேஷ பூஜைகள் நடந்தது. அதிகாலை முதல் ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். விழாவை முன்னிட்டு சீதா ராமர் திருக்கல்யாண வைபவம் தர்மபுரி மாதவாச்சாரியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இதைத் தொடர்ந்து மேளதாளங்கள் முழங்க சீர்வரிசை அழைப்பு ஊர்வலம் நடைபெற்றது. தொடர்ந்து, பாரம்பரிய முறைப்படி சீதா ராமர் திருக்கல்யாணம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

அவர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. தொடர்ந்து இரவு மேளதாளங்கள் முழங்க சாமி திருவீதி உலா நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகம் மற்றும் விழா குழுவினர் செய்து இருந்தனர். இதேபோல், தர்மபுரி கடைவீதியில் உள்ள வெங்கட்ரமண சாமி கோயிலில், சாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் மற்றும் வழிபாடுகள் நடைபெற்றது. பின்னர் சாமிக்கு திருக்கல்யாணம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

தர்மபுரி டவுன் ஹரிஹரநாத சாமி கோயில் தெருவில் உள்ள சீதாராம தாச ஆஞ்சநேயர் கோயிலில், ராமச்சந்திர மூர்த்திக்கும், சீதாதேவிக்கும் திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது. பின்னர் சாமிக்கு தங்க கவசம் அலங்கார சேவையும், மகா தீபாராதனை நடைபெற்றது. அன்னசாகரத்தான் கொட்டாயில் உள்ள பஞ்சமலை ஆஞ்சநேயர் கோவிலில், ஆஞ்சநேயருக்கு அதிகாலை தேன், பன்னீர், சந்தனம், இளநீர், தயிர் போன்ற சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் வழிபட்டனர். இதே போல், மாவட்டத்தில் உள்ள அனைத்து பெருமாள் கோயில்களிலும், ராம நவமி விழாவை முன்னிட்டு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது.

Related Stories: