துவரங்குறிச்சி, மார்ச் 28: வளநாடு மற்றும் வையம்பட்டி தேர்தல் பறக்கும் படை வாகன சோதனையில் ரூ.5,77 லட்சம் பணம் பிடிப்பட்டது. திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சி அடுத்த வையம்பட்டி டேம் நால்ரோடு பகுதியில் நேற்று மாலை தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் பகுதியைச் சேர்ந்த கார்த்திகேயன் என்பவர் வாகனத்தில் வந்தபோது அவரை பறக்கும் படையினர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது உரிய ஆவணங்கள் இன்றி கொண்டுவரப்பட்ட ரூ.55,600ஐ கைப்பற்றி மணப்பாறை தாசில்தார் அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.
இதேபோன்று வளநாடு கைகாட்டி மேட்டுப்பட்டி அருகே வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தபோது புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த பாண்டியன் என்பவரிடம இருந்து உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு வந்த ரூ.51,660 ரூபாய் கைப்பற்றினர். கைப்பற்றிய பணம் மணப்பாறை தாசில்தார் அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டது. ஒப்படைக்கப்பட்ட ரூ.1,07,260 மணப்பாறை கருவூலத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டது. இதேபோல லால்குடியில் தேர்தல் பறக்கும் படை நடத்திய சோதனையில் ரூ.4.70 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.
