மன்னார்குடி அருகே பைக்கில் எடுத்து சென்ற ரூ.1.70 லட்சம் பறிமுதல்: பறக்கும் படை சோதனையில் சிக்கியது

மன்னார்குடி, மார்ச் 28: திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் அண்ணா சிலை அருகே நேற்று மதியம் வட்டார வளர்ச்சி அலுவலர் சிவராமன், எஸ்எஸ்ஐ ராமலிங்கம், ஏட்டு பாலமுருகன் ஆகியோர் அடங்கிய பறக்கும் படையினர் (எண் 1) தீவிர கண் காணிப்பு மற்றும் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியே வந்த பைக் ஒன்றை சந்தேகத்தின் பேரில் தேர்தல் பறக்கும் படையினர் மடக்கி சோதனை நடத்தினர். அப்போது பைக்கில் இருந்த நபரிடம் ரூ.1.70 லட்சம் ரொக்க பணம் இருந்தது தெரிய வந்தது.

இதனை தொடர்ந்து பைக்கில் வந்த, தஞ்சை மாவட்டம் பாபநாசம் அடுத்த மகிமாலை கிராமத்தை சேர்ந்த தனியார் நிதி நிறுவன ஊழியர் திவாகரிடம் பணத்திற்கான ஆவணங்களை பறக்கும் படையினர் கேட்டுள்ளனர். ஆனால் நிதிநிறுவன ஊழியரான திவாகரிடம் பணத்திற்கான எந்த ஆவணங்களும் இல்லை என்பது தெரிய வந்தது. இதனை தொடர்ந்து அவரிடம் இருந்த ரொக்க பணம் பறிமுதல் செய்யப்பட்டது. பறிமுதல் செய்யப்பட்ட ரூ.1.70 லட்சத்தை தேர்தல் நடத்தும் அலுவலரின் நேர்முக உதவியாளர் சரவணன் வசம் பறக்கும் படையினர் ஒப்படைத்தனர். அப்போது முதுநிலை வருவாய் ஆய்வாளர் விக்னேஷ் பிரபு உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

 

Related Stories: