டிப்பர் லாரி- பஸ் மோதியதில் டீசல் டேங்க் வெடித்து பயங்கர தீ ஆந்திராவில் 13 பயணிகள் கருகி பலி: 28 பேர் படுகாயம்

திருமலை: ஆந்திராவில் டிப்பர் லாரி மோதியதில் பஸ்சின் டீசல் டேங்க் வெடித்து தீப்பிடித்து எரிந்ததில் 13 பயணிகள் உடல் கருகி பரிதாபமாக இறந்தனர். மேலும் பலர் படுகாயம் அடைந்தனர். தெலங்கானா மாநிலம் நிர்மல் மாவட்டத்தில் இருந்து ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டத்திற்கு தனியார் பஸ் நேற்று முன்தினம் இரவு 40 பயணிகளுடன் புறப்பட்டது. இந்நிலையில் நேற்று அதிகாலை ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டம் மார்க்காபுரம் அருகே வந்தபோது எதிரே ராயவரம் அருகே உள்ள கல்குவாரியில் இருந்து ஜல்லி கற்களை ஏற்றி வந்த டிப்பரி லாரி, பஸ் மீது மோதி கவிழ்ந்தது. இதில் பஸ்சின் டீசல் டேங்கர் வெடித்தது.

இதனால் கண்ணிமைக்கும் நேரத்தில் பஸ் தீப்பிடித்து எரிந்தது. பஸ் முழுவதும் தீ பரவிய நிலையில், அதிகாலை ஆழ்ந்த தூக்கத்தில் இருந்த பயணிகள் அலறியடித்தபடி பஸ்சில் இருந்து கீழே இறங்க முயன்றனர். சிலர் பஸ் கண்ணாடிகளை உடைத்துக்கொண்டு கீழே குதித்தனர். இதில் பலரது கை, கால் எலும்புகள் முறிந்தது. மேலும் பலர் பஸ்சுக்குள்ளேயே சிக்கிக்கொண்டு தீயில் கருகினர். அதற்குள் பஸ் கொழுந்துவிட்டு எரிந்தது. இதுகுறித்து தகவலறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயை அணைத்தனர்.

மேலும் பஸ்சுக்குள் தீயில் கருகி இறந்து கிடந்த 13 பேரின் சடலங்களை மீட்டனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், பலத்த தீக்காயம் அடைந்த 28 பேரை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதில் பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன. பலியான 13பேரின் சடலங்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இறந்தவர்களின் சடலங்கள் அடையாளம் காண முடியாத அளவிற்கு கருகியுள்ளது. எனவே டிஎன்ஏ பரிசோதனை மூலம் சடலங்கள் அடையாளம் காணப்பட உள்ளது. இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

விபத்து குறித்து தகவலறிந்த ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார். மேலும் காயமடைந்தவர்களுக்கு தரமான சிகிச்சை அளிக்க மருத்துவர்களுக்கு உத்தரவிட்டுள்ளார். அதேபோல் விபத்து குறித்து விசாரணை நடத்த போக்குவரத்து துறை அமைச்சர் ராம்பிரசாத், உள்துறை அமைச்சர் அனிதா ஆகியோருக்கு உத்தரவிட்டுள்ளார். இதனிடையே விபத்து குறித்து தகவலறிந்த பிரதமர் நரேந்திரமோடி பலியானவர்களின் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்தார். மேலும் இறந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரம் வழங்குவதாகவும் தெரிவித்துள்ளார்.

Related Stories: