பெங்களூரு: பெங்களூரு போலீஸ் கமிஷ்னரேட்டிற்கு உட்பட்ட கோணனகுண்டே போலீஸ் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக இருப்பவர் பாபண்ணா. அவர் அதே காவல் சரகத்திற்கு உட்பட்ட பகுதியில் பெண் ரவுடி பட்டியலில் இருக்கும் யஷஸ்வினி கவுடாவுக்கு கடந்த 3 மாதங்களாக பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. யஷஸ்வினிகவுடாவின் செல்போன் எண்ணில் தொடர்பு கொண்டும், செல்போனுக்கு ஆபாசமான வார்த்தைகள் பயன்படுத்தி வாட்ஸ் ஆப் மூலம் தகவல் அனுப்பியது, யஷஸ்வினி கவுடாவுடன் செல்போனில் பேசிய ஆபாச உரையாடல்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்நிலையில் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாபண்ணா, தனக்கு கடந்த 3 நாட்களாக பாலியல் தொல்லை கொடுத்து வருவதாக யஷஸ்வினி கவுடா, பெங்களூரு மாநகர காவல் ஆணையர் சீமந்த்குமார் சிங்கிடம் புகார் கொடுத்தார். அதை பரிசீலனை செய்த மாநகர காவல் ஆணையர், உடனடியாக பாப்பண்ணாவை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளதுடன் இப்புகார் தொடர்பாக விசாரணை நடத்த தனி குழு அமைத்துள்ளார்.
