சென்னை: கடந்த 2018ல் பசும்பொன் தேவர் ஜெயந்தி விழாவுக்காக, அப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்களை வரவேற்று அதிமுக சார்பில் வைக்கப்பட்ட 200க்கும் மேற்பட்ட பிளக்ஸ் பேனர்களை அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் தூண்டுதலின் பேரில் அவரது கட்சியினர் சேதப்படுத்தியதாக அதிமுக மாவட்ட செயலாளர் முனியசாமி அளித்த புகாரின் அடிப்படையில் தினகரன் உள்ளிட்டோருக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு கமுதி நீதிமன்றத்தில் நடக்கிறது.
இதேபோல், 2021 தேர்தல் பிரசாரத்தின் போது எடப்பாடி பழனிசாமி, அமைச்சர் சி.வி.சண்முகம் உள்ளிட்டோரை அவதூறாக பேசியதாக அதிமுக வழக்கறிஞர் அணி இணை செயலாளர் பாபு முருகவேல் அளித்த புகாரில் தினகரன் மீது விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இந்த 2 வழக்குகளையும் ரத்து செய்யக் கோரி, தினகரன் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். கடந்த முறை நீதிபதி ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா முன்பு விசாரணைக்கு வந்த போது, இரு தரப்பும் சமரசம் செய்து கொண்டதாக தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, டிடிவி.தினகரனும், புகார்தாரர்களும் நேரில் ஆஜராக நீதிபதி உத்தரவிட்டார். அதன்படி, தினகரன், புகார்தாரர்கள் முனியசாமி, பாபுமுருகவேல் ஆஜராகி தங்களுக்குள் சமரசம் ஏற்பட்டதாக தெரிவித்தனர். இதனை பதிவு செய்த நீதிபதி, தினகரன் மீதான 2 வழக்குகளை ரத்து செய்து உத்தரவிட்டார். மேலும், பேனர்கள் சேதப்படுத்தப்பட்ட வழக்கில் மட்டும் வழக்கு செலவுத் தொகையாக 50 ஆயிரம் ரூபாயை தமிழ்நாடு சட்டப் பணிகள் ஆணையத்தில் செலுத்துமாறு தினகரனுக்கு நீதிபதி உத்தரவிட்டார்.
