சென்னை: பா.ம.க. தலைவராக தன்னை அங்கீகரிக்க வேண்டும், உட்கட்சி பிரச்னை தொடர்பான உரிமையியல் வழக்கில் தீர்வு எட்டப்படும் வரை மாம்பழம் சின்னத்தை முடக்கி வைக்குமாறு தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட கோரி ராமதாஸ் தாக்கல் செய்த மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இந்த உத்தரவை எதிர்த்து ராமதாஸ் தொடர்ந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், மாம்பழம் சின்னம் தொடர்பாக சென்னை உரிமையியல் நீதிமன்றம் விசாரித்து மூன்று நாட்களுக்குள் உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று உத்தரவிட்டது. அதன்படி, மாம்பழ சின்னத்தை முடக்கக்கோரி ராமதாஸ் தாக்கல் செய்த மனு சென்னை 13வது கூடுதல் உரிமையியல் நீதிமன்ற நீதிபதி தர்மபிரபு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது ராமதாஸ் தரப்பில் மூத்த வழக்கறிஞர் எஸ்.பிரபாகரன், பாமக பொதுச்செயலாளர் வடிவேல் ராவணன் தரப்பில் மூத்த வழக்கறிஞர் என்.எல்.ராஜா, தேர்தல் ஆணையம் சார்பில் வழக்கறிஞர் நிரஞ்சன் ராஜகோபால், அன்புமணி தரப்பில் மூத்த வழக்கறிஞர் சித்ரா சம்பத் மற்றும் தேர்தல் ஆணையத்தின் சார்பில் வழக்கறிஞர் ஆஜராகினர். அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, மாம்பழம் சின்னத்தை முடக்கிவைக்க கோரி தொடரப்பட்ட மனுக்கள் தள்ளுபடி செய்யப்படுகிறது. இந்த வழக்கில் தன்னையும் இணைக்க கோரி கட்சியின் பொதுச்செயலாளர் தாக்கல் செய்த மனு ஏற்றுக்கொள்ளப்படுகிறது. மனுதாரர் தேர்தல் ஆணையத்தை அணுகி நிவாரணம் பெற்றுக்கொள்ளலாம் என்று உத்தரவிட்டார். உச்ச நீதிமன்றம் 3 நாட்களுக்குள் விசாரித்து தீர்ப்பளிக்க வேண்டும் என்று உத்தரவிட்ட நிலையில் 2 நாட்களில் இந்த வழக்கில் உரிமையியல் நீதிமன்றம் தீர்வு கண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
