மாநில எல்லை தாண்டி கேரளம் மாநிலத்திலும் திராவிட மாடல் அரசின் புகழ் பரப்பும் முதலமைச்சரின் காலை உணவு திட்டம்: பசியாறும் தமிழ் மாணவர்கள்: பெற்றோர்கள் வரவேற்பு

கூடலூர்: தேக்கடியில் இயங்கி வரும் தமிழ்நாடு அரசின் துவக்க பள்ளியில் முதல்வரின் காலை உணவு திட்டம் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருவது மாணவர்கள், அவர்களது பெற்றோரிடம் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. தமிழகத்தில் அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளில் மாணவர்களின் வசதிக்காக மதிய சத்துணவு திட்டத்துடன் காலை உணவு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டம் இந்திய அளவில் மட்டுமல்லாது உலக அளவிலும் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. தமிழக-கேரளம் எல்லைப்பகுதியில் அமைந்துள்ள பள்ளியிம் சிறந்த முறையில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

கேரளம் மாநிலம் இடுக்கி மாவட்டம், குமுளி அருகே, தேக்கடியில் தமிழக பொதுப்பணி துறைக்கு சொந்தமான இடத்தில், கம்பம் ஊராட்சி ஒன்றியத்தின் கீழ் தமிழ்நாடு அரசு துவக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. முல்லைப் பெரியாறு அணை கட்டுமானப் பணியின்போது அங்கு தங்கியிருந்த பணியாளர்களின் குழந்தைகள் படிப்பதற்காக இப்பள்ளி தொடங்கப்பட்டது. பின்னர், செயல்படாத நிலையில், பல ஆண்டுகள் இடைவெளிக்குப் பிறகு மீண்டும் 1965ம் ஆண்டு முதல் இப்பள்ளி இயங்கி வருகிறது. கேரளம் மாநில எல்லைக்குள் இப்பள்ளி இருந்தாலும் தமிழக மாணவர்கள் படித்து வருகின்றனர். கேரள பகுதியான குமுளி, ரோஜாப்பூக்கண்டம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் தமிழ் பேசும் மக்கள் அதிகளவில் வாழ்ந்து வருகின்றனர். இவர்களது குழந்தைகள் இந்த பள்ளியில் படித்து வருகின்றனர். இப்பள்ளியில் இரண்டு ஆசிரியர்கள் பணிபுரிகின்றனர்.

9 மாணவ, மாணவியர் பயின்று வருகின்றனர். கேரளம் மாநில எல்லைக்குள் இப்பள்ளி இருந்தாலும் காலை உணவுத் திட்டம் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. இது தவிர மாணவர்களுக்கு அரசு சார்பில் இலவச நோட்டு புத்தகம், சீருடை, காலணி, ஸ்கூல் பேக், ரெயின் கோட் உள்ளிட்ட நல உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. இது மாணவர்களின் பெற்றோர்கள் மத்தியில் மிகுந்த நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தப் பள்ளியில் பயிலும் மாணவர்களுக்காக இங்கு பணியாற்றும் ஆசிரியர்களே தங்களது சொந்த செலவில் ஆட்டோ வசதி ஏற்படுத்தித் தந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

20 லட்சம் மாணவர்கள் பயன்
தமிழ்நாட்டில் 1,545 அரசு தொடக்கப் பள்ளிகளில் பயிலும் சுமார் 1.14 லட்சம் மாணவர்கள் பயன்பெறும் வகையில் கடந்த 2022ம் ஆண்டு செப்.15-ம் தேதி காலை உணவு திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். பின்னர், காலை உணவு திட்டம் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் விரிவாக்கம் செய்யப்பட்டது. இதன் மூலம் மொத்தம் சுமார் 20 லட்சம் மாணவ, மாணவிகளுக்கு சத்தான காலை உணவு வழங்கப்பட்டு வருகிறது.

Related Stories: