திருத்துறைப்பூண்டி: திருவாரூர் மாவட்டத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாடல் அரசில் எண்ணற்ற வளர்ச்சி திட்ட பணிகள் நடந்து வருகிறது. இந்நிலையில் திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டம் 2023-24ன் கீழ் ரூ.7 கோடியில் புதிய பேருந்து நிலையம் கட்டும் பணி நடந்து வருகிறது. அதுவரை பயணிகள் நலன்கருதி கடந்தாண்டு மே 1ம் தேதி முதல் திருத்துறைப்பூண்டி நகராட்சிக்குட்பட்ட திருவாரூர் சாலையில் உள்ள பெட்ரோல் பங்க் எதிர்புறம், திருவாரூர் சாலையில் அமைந்துள்ள கால்நடை மருத்துவமனையையொட்டி என இரண்டு இடங்களில் தற்காலிக பேருந்து நிலையம் அமைக்கப்பட்டு இயங்கி வருகிறது.
பெட்ரோல் பங்குக்கு எதிர்புறம் உள்ள தற்காலிக பேருந்து நிலையத்தில் இருந்து வேதாரண்யம், மன்னார்குடி மார்க்கம் வழியாக வரக்கூடிய பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. கால்நடை மருத்துவமனை அருகில் உள்ள தற்காலிக பேருந்து நிலையத்தில் இருந்து திருவாரூர், நாகை, பட்டுக்கோட்டை மார்க்கங்களில் இருந்து வரக்கூடிய பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது.
இதற்கிடையில் திருத்துறைப்பூண்டியில் புதிய பேருந்து நிலையம் கட்டும் பணி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதில் 80 சதவீத பணிகள் நிறைவடைந்துள்ளது. புதிய பஸ் நிலையத்தில் வணிக நிறுவன கடைகள் மற்றும் பயணிகள், டிரைவர்களுக்கு தேவையான கட்டமைப்பு வசதிகள் செய்யப்பட்டு வருகிறது. அனைத்து பணிகளும் முடிந்து சட்டமன்ற தேர்தல் முடிந்ததும் புதிய பஸ் நிலையம் திறக்கப்படும். இதனால் புதிய பேருந்து நிலையம் திறப்பை பயணிகள் ஆவலுடன் எதிர்பார்த்துள்ளனர்.
