திருவனந்தபுரம்: கேரளாவில் இன்று வேட்பு மனுக்களை வாபஸ் பெறுவதற்கான கடைசி நாள் ஆகும். கேரளாவில் 140 தொகுதிகளுக்கான சட்டப்பேரவை தேர்தல் ஏப்ரல் 9ம் தேதி நடைபெறுகிறது. இதற்கான வேட்பு மனு தாக்கல் கடந்த 16ம் தேதி தொடங்கி 23ம் தேதி நிறைவடைந்தது. மொத்தம் 2 ஆயிரத்திற்கும் அதிகமான வேட்பாளர்கள் மனு தாக்கல் செய்திருந்தனர். நேற்று முன்தினம் வேட்பு மனுக்கள் பரிசீலனை செய்யப்பட்டன. இதில் புகார்கள் வந்ததை தொடர்ந்து நேமம் தொகுதியில் போட்டியிடும் பாஜ மாநில தலைவர் ராஜீவ் சந்திரசேகர் மற்றும் பரவூர் தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த எதிர்க்கட்சித் தலைவர் சதீசன் ஆகியோரின் மனுக்களை பரிசீலனை செய்வதில் காலதாமதம் ஏற்பட்டது.
பல கட்ட ஆலோசனைகளுக்கு பின்னர் இவர்களது மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டன. பரிசீலனையின் முடிவில் மொத்தம் 1603 பேரின் வேட்பு மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டன. இன்று வேட்பு மனுக்களை வாபஸ் பெறுவதற்கான கடைசி நாள் ஆகும். இன்று மாலைக்குள் கேரளாவில் தேர்தல் களத்தில் மோதப் போவது யார் யார் என்று தெரிந்துவிடும். இதற்கிடையே கேரளாவில் தேர்தலுக்கு இன்னும் 2 வாரங்கள் மட்டுமே இருப்பதால் பிரசாரம் சூடு பிடித்து உள்ளது. பிரதமர் மோடி, எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி உள்பட தேசிய தலைவர்கள் விரைவில் கேரள வர உள்ளனர். பிரதமர் மோடி வரும் 29ம் தேதி பாலக்காடு மற்றும் திருச்சூரில் பாஜ கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்கிறார்.
