புதுடெல்லி: சமையல் காஸ் சிலிண்டர் விநியோகப் பற்றாக்குறை இருப்பதாகக் கூறப்படுவதைக் கண்டித்து, பல எதிர்க்கட்சி எம்.பி.க்கள் நேற்று நாடாளுமன்ற வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர். காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, தேசியவாத காங்கிரஸ்(எஸ்பி)கட்சியின் சுப்ரியா சுலே, சமாஜ்வாடி கட்சியின் தர்மேந்திர யாதவ், சிபிஐ-எம்எல்-கட்சியின் சுதாமா பிரசாத், திமுகவின் டி. சுமதி, ஜேஎம்எம் கட்சியின் மஹுவா மாஜி உள்ளிட்டோர் நாடாளுமன்ற வளாகம் அருகே நடைபெற்ற இந்தப் போராட்டத்தில் பங்கேற்றனர். ‘காலி சிலிண்டர்கள், வெற்று வாக்குறுதிகள்’ என்று எழுதப்பட்ட ஒரு பெரிய பதாகையை ஏந்தியபடி, எம்.பி.க்கள் ஒன்றிய அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர்.
* போலீஸ் படையை நவீன மயமாக்க ஒன்றிய அரசு ரூ. 450.53 கோடி ஒதுக்கீடு
மாநிலக் காவல் படைகளை நவீனமயமாக்கும் திட்டத்தின் கீழ், அடுத்த நிதியாண்டிற்காக ஒன்றிய அரசு ரூ. 450.53 கோடியை ஒதுக்கியுள்ளதாக உள்துறை இணையமைச்சர் நித்யானந்த் ராய் மாநிலங்களவையில் தெரிவித்தார். 2025-26 ஆம் ஆண்டிற்கான இத்திட்டத்தின் வரவு செலவுத் திட்ட மதிப்பீடு ரூ. 540 கோடியாக இருந்தது. நடப்பு நிதியாண்டில் இச்செலவினம் ரூ. 593 கோடியாக உயரக்கூடும். எனவே 2026-27 ஆம் ஆண்டிற்கான பட்ஜெட்டில், இத்திட்டத்திற்காக ரூ. 450.53 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்றார்.
* இன்று முதல் 4 நாட்கள் நாடாளுமன்றத்திற்கு விடுமுறை
நாடாளுமன்றத்தின் இரு அவைகளும், முன்னதாகத் திட்டமிட்டிருந்தபடி வார இறுதி நாட்களான மார்ச் 28, 29ல் கூடாது என்று நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு மக்களவையில் தெரிவித்தார். பண்டிகைகள் காரணமாக கடந்த வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் நாடாளுமன்றம் கூடவில்லை. எனவே, மார்ச் 28 மற்றும் 29 ஆகிய தேதிகளில் முறையே சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இரு அவைகளும் கூடும் என்று முன்னதாக முடிவு செய்யப்பட்டிருந்தது. தற்போது நாடாளுமன்றம் வார இறுதியில் கூடாது என்று அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்தார். மேலும் தற்போது, ராம நவமி பண்டிகையை முன்னிட்டு இன்றும், மகாவீரர் ஜெயந்தியை முன்னிட்டு மார்ச் 31 ஆம் தேதியும் நாடாளுமன்றம் கூடாது. அதே சமயம் இக்கூட்டத்தொடர் ஏப்ரல் 2ஆம் தேதி வரை தொடரும்’ என்றார்.
* அனைத்து உயர்நிலைப்பள்ளிகளிலும் பிராட்பேண்ட் இணைய வசதி
இந்தியாவின் அனைத்து உயர்நிலைப் பள்ளிகளிலும் அடுத்த 2 முதல் 3 ஆண்டுகளுக்குள் பிராட்பேண்ட் இணைய வசதி ஏற்படுத்தப்படும் என்று கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்தார். மாநிலங்களவையில் கேள்வி நேரத்தின்போது எழுப்பப்பட்ட துணைக் கேள்விகளுக்குப் பதிலளித்த அவர், அனைத்து வகையான கல்வி முறைகளிலும் செயற்கை நுண்ணறிவு ஒருங்கிணைக்கப்பட வேண்டும். ஆசிரியர்களுக்குச் செயற்கை நுண்ணறிவு குறித்த அறிவை வழங்குவதற்காக, அவர்களுக்குத் திறன் மேம்பாட்டுப் பயிற்சியளிப்பதில் ஒன்றிய மற்றும் மாநில அரசுகள் கவனம் செலுத்தி வருவதாக தெரிவித்தார்.
* மக்களவையில் கேள்வி கேட்ட அவையின் பொறுப்பு தலைவர்
நாடாளுமன்ற நடவடிக்கைகளில் மிகவும் அரிதான ஒரு நிகழ்வாக, நேற்று மக்களவையின் கேள்வி நேரத்தின்போது, தலைமைப் பொறுப்பில் இருந்தவர் நேரடியாக ஒரு கேள்வியை எழுப்பினார். அரிய மண் கனிமங்கள் குறித்து தான் பட்டியலிட்டிருந்த ஒரு கேள்வி விவாதத்திற்கு வந்தபோது, தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் கிருஷ்ண பிரசாத் தென்னேட்டி மக்களவை தலைவர் இருக்கையில் அமர்ந்திருந்தார். தலைமை இருக்கையில் இருந்தபடியே அந்தக் கேள்வியைக் கேட்பதற்கு, தென்னேட்டி அவையின் அனுமதியைப் பெற்றார். ‘அடுத்த கேள்வி என் பெயரில் உள்ளது. நீங்கள் விரும்பினால், அதற்குப் பதிலளிக்கலாம்’ என்று அவர் புவி அறிவியல் துறைக்கான இணை அமைச்சரும் (தனிப் பொறுப்பு) ஆன ஜிதேந்திர சிங்கிடம் கூறினார். அதன்படி கேள்வி எழுப்பி பதிலும் பெற்றார்.
* 1,300 ஐஏஎஸ், 505 ஐபிஎஸ் பணியிடங்கள் காலியாக உள்ளன
நாடு முழுவதும் 1,300 ஐஏஎஸ் பணியிடங்களும், 505 ஐபிஎஸ் பணியிடங்களும் காலியாக உள்ளதாக மக்களவையில் தெரிவிக்கப்பட்டது. ஐஏஎஸ் பணிக்காக அனுமதிக்கப்பட்ட மொத்தமுள்ள 6,877 பணியிடங்களில், தற்போது 5,577 அதிகாரிகள் பணியில் உள்ளனர் என்று ஒன்றிய பணியாளர் துறை இணையமைச்சர் ஜிதேந்திர சிங் எழுத்துப்பூர்வமான பதிலில் தெரிவித்தார். ஐபிஎஸ் பணிக்காக அனுமதிக்கப்பட்ட மொத்த எண்ணிக்கை 5,099 ஆக உள்ள நிலையில், தற்போது 4,594 அதிகாரிகள் பணியில் உள்ளனர் என்றும் அவர் கூறினார். இந்திய வனப் பணிக்கு அனுமதிக்கப்பட்ட மொத்த எண்ணிக்கை 3,193 ஆக உள்ள நிலையில், தற்போது 1,029 பணியிடங்கள் காலியாக உள்ளன என்று தெரிவித்தார்.
* 2027 மக்கள் தொகை கணக்கெடுப்பில் சாதி தொடர்பான கேள்விகள்
மக்கள் தொகை கணக்கெடுப்பாளர்களால் கேட்கப்படவுள்ள சாதி தொடர்பான கேள்விகள், 2027 மக்கள் தொகை கணக்கெடுப்பின் இரண்டாம் கட்டம் தொடங்குவதற்கு முன்பாகவே அறிவிக்கப்படும் என்று மாநிலங்களவையில் தெரிவிக்கப்பட்டது. இது தொடர்பான ஒரு எழுத்துப்பூர்வ பதிலில், உள்துறை இணையமைச்சர் நித்யானந்த் ராய் கூறியதாவது: ஒவ்வொரு மக்கள் தொகை கணக்கெடுப்பிற்கும் முன்னதாக, பல்வேறு அமைச்சகங்கள், துறைகள், அமைப்புகள் மற்றும் கணக்கெடுப்புத் தரவைப் பயன்படுத்துவோர் உள்ளிட்டோரிடமிருந்து பெறப்படும் கருத்துக்கள் மற்றும் ஆலோசனைகளின் அடிப்படையில் இந்தக் கேள்விகள் இறுதி செய்யப்படும். இரண்டாம் கட்டத்திற்கான கேள்விகள் சாதி தொடர்பான கேள்விகள் உட்பட ஏற்கனவே வகுக்கப்பட்டுள்ள நடைமுறைகளின்படி இறுதி செய்யப்பட்டு, முறையாக அறிவிக்கப்படும் என்று அவர் கூறினார்.
