கிறைஸ்ட்சர்ச்: தென் ஆப்ரிக்கா மகளிர் கிரிக்கெட் அணிக்கு எதிரான 5வது டி20 போட்டியில் நேற்று, நியூசிலாந்து மகளிர் 92 ரன் வித்தியாசத்தில் மகத்தான வெற்றி பெற்று தொடரை கைப்பற்றினர். தென் ஆப்ரிக்கா மகளிர் அணி, நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ஆடியது. ஏற்கனவே முடிந்த 4 போட்டிகளில் 3-1 என்ற கணக்கில் நியூசி மகளிர் தொடரை கைப்பற்றிய நிலையில் கடைசி மற்றும் 5வது டி20 போட்டி கிறைஸ்ட்சர்ச் நகரில் நேற்று நடந்தது. டாஸ் வென்ற தென் ஆப்ரிக்கா பந்து வீச்சை தேர்வு செய்தது. அதையடுத்து களமிறங்கிய நியூசி அணியின் துவக்க வீராங்கனை இஸபெல்லா கேஸ் 1 ரன்னில் வீழ்ந்தார்.
மற்றொரு துவக்க வீராங்கனை ஜார்ஜியா பிளிமர் 27 ரன் எடுத்தார். 3வது விக்கெட்டுக்கு களமிறங்கிய கேப்டன் அமெலியா கெர், தெ.ஆ. பந்துகளை தெறிக்க விட்டு ரன் மழை பொழிந்தார். 55 பந்துகளை எதிர்கொண்ட அவர் 1 சிக்சர் 19 பவுண்டரிகளுடன் 105 ரன்கள் விளாசினார். அதனால், 20 ஓவரில் நியூசிலாந்து 6 விக்கெட் இழப்புக்கு 194 ரன் குவித்தது. அதையடுத்து களமிறங்கிய தென் ஆப்ரிக்கா அணியின் துவக்க வீராங்கனைகள் க்ளோ டிரையோன் 1, சூன் லூஸ் 13 ரன்னில் அவுட்டாகி மோசமான துவக்கம் தந்தனர். அடுத்து வந்த வீராங்கனைகளும் சொற்ப ரன்களில் வீழ்ந்து பெவிலியன் திரும்பினர். 20 ஓவரில் தென் ஆப்ரிக்கா மகளிர் 9 விக்கெட் இழப்புக்கு 102 ரன் எடுத்தனர். அதனால், 92 ரன் வித்தியாசத்தில் பிரம்மாண்ட வெற்றியை பதிவு செய்த நியூசி மகளிர், 4-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றி சாதனை படைத்தனர். ஆட்ட நாயகி மற்றும் தொடர் நாயகி, அமெலியா கெர்.
