* தமிழக வீரர் ரீகனுக்கு தங்கம்
புவனேஸ்வர்: தேசிய உள்ளரங்க தடகள சாம்பியன்ஷிப் போட்டிகள் புவனேஸ்வர் நகரில் நடந்து வருகின்றன. நேற்று நடந்த, கோலூன்றி உயரம் தாண்டுதல் (போல்வால்ட்) ஆடவர் பிரிவு போட்டியில் தமிழக வீரர் ரீகன், 5.30 மீட்டர் உயரம் தாண்டி முதலிடம் பிடித்து தங்கப்பதக்கம் வென்றார். இது, அவரது வாழ்நாள் சாதனையாக அமைந்தது. தவிர, தேசிய அளவில் உள்ளரங்க தடகள வரலாற்றில் 3வது அதிகபட்ச உயரத்தை ரீகன் தாண்டி உள்ளார். இதுகுறித்து ரீகன் கூறுகையில், ‘உள்ளரங்க தடகள போட்டிகளில் இது எனக்கு முதல் முறை அனுபவம். என்னை பொறுத்தவரை பெரிய சாதனை படைத்ததாக உணர்கிறேன்’ என்றார்.
* லிவர்பூல் அணியில் வெளியேறும் சலா
லண்டன்: இங்கிலாந்தை சேர்ந்த புகழ் பெற்ற லிவர்பூல் கால்பந்து அணியில் கடந்த 9 ஆண்டாக ஆடி வரும் எகிப்தை சேர்ந்த ஜாம்பவான் வீரர் முகம்மது சலா, நடப்பு 2025 – 26 சீசனுடன் அணியில் இருந்து வெளியேறுவதாக அறிவித்துள்ளார். லிவர்பூல் அணிக்காக இதுவரை 430 போட்டிகளில் பங்கற்றுள்ள சலா, 250க்கும் மேற்பட்ட கோல்கள் போட்டுள்ளார். அவரது சிறப்பான ஆட்டத்தால், லிவர்பூல் அணி 9 முறை சாம்பியன் பட்டங்கள் வென்றுள்ளது. லிவர்பூல் அணியின் தற்போதைய மேலாளர் அர்னி ஸ்லாட் உடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் அவர் அணியில் இருந்து வெளியேறுவதாக கூறப்படுகிறது.
* ஆர்ஆரில் ஷேன் வார்ன் பங்கு ரூ.460 கோடி
ஜெய்ப்பூர்: ஆஸ்திரேலியாவை சேர்ந்த ஜாம்பவான் சுழல்பந்து வீச்சாளர் ஷேன் வார்ன், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டனாக, கடந்த 2008ல் செயல்பட்டார். அப்போது, தான் ஆடும் ஒவ்வொரு ஆண்டும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி (ஆர்ஆர்), 0.75 சதவீத பங்கு அளிக்க வேண்டும் என ஒப்பந்தம் செய்திருந்தார். 4 முறை ராஜஸ்தான் அணிக்காக அவர் ஆடியுள்ளார். கடந்த 2022ல் ஷேன் வார்ன் மறைந்த நிலையில், தற்போது, ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, ரூ.15,300 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. அதில் 3 சதவீத பங்கு தொகையாக, ரூ. 460 கோடி, ஷேன் வார்ன் குடும்பத்துக்கு கிடைக்கும் என்ற தகவல் வெளியாகி உள்ளது.
