5வது டி20யில் நியூசி சரண்டர்: அயல் மண்ணில் அசத்திய தெ.ஆ.; தொடரை வென்று சாதனை

கிறைஸ்ட்சர்ச்: நியூசிலாந்து அணிக்கு எதிரான கடைசி டி20 போட்டியில் நேற்று, தென் ஆப்ரிக்கா அணி 33 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றி அசத்தியுள்ளது. தென் ஆப்ரிக்கா ஆடவர் கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 5 டி20 போட்டிகளில் ஆடி வந்தது. ஏற்கனவே முடிந்த 4 போட்டிகளில் இரு அணிகளும் தலா இரு போட்டிகளில் வென்று சமனில் இருந்தன. இந்நிலையில், இந்த அணிகள் இடையிலான கடைசி மற்றும் 5வது டி20 போட்டி கிறைஸ்ட்சர்ச் நகரில் நேற்று நடந்தது. டாஸ் வென்ற நியூசி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதையடுத்து தென் ஆப்ரிக்காவின் டோனி டி ஜோர்ஸி, வியான் முல்டர் துவக்க வீரர்களாக களமிறங்கினர். டோனி 12 ரன்னிலும், அவரைத் தொடர்ந்து முல்டர் 31 ரன்னிலும் வீழ்ந்தனர்.

பின் வந்தோரில் ரூபின் ஹெர்மான் 39 ரன்களும், கானர் எஸ்டெர்ஹுசேன் 33 பந்துகளில் 6 சிக்சர், 5 பவுண்டரிகளுடன் 75 ரன்களும் குவித்து அணியின் ஸ்கோரை உயர்த்தினர். அதனால், 20 ஓவரில் தென் ஆப்ரிக்கா 4 விக்கெட் இழப்புக்கு 187 ரன்கள் எடுத்தது. அதையடுத்து, 188 ரன் வெற்றி இலக்குடன் நியூசியின் துவக்க வீரர்கள் கடேனே கிளார்க், டிம் ராபின்சன் களமிறங்கினர். 2வது ஓவரில் கிளார்க் வெறும் 2 ரன்னில் வீழ்ந்து மோசமான துவக்கம் தந்தார். பின் வந்த டேன் கிளீவர் 22 ரன்னிலும், ராபின்சன் 25 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். மற்ற வீரர்களில் பெவோன் ஜேகப்ஸ் 36, கேப்டன் ஜேம்ஸ் நீஷம் 24 ரன் எடுத்தனர். 20 ஓவரில் நியூசி. 8 விக்கெட் இழப்புக்கு 154 ரன் மட்டுமே எடுக்க முடிந்தது. அதனால், 33 ரன் வித்தியாசத்தில் தென் ஆப்ரிக்கா அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியை அடுத்து 3-2 என்ற கணக்கில் தென் ஆப்ரிக்கா தொடரை கைப்பற்றி அசத்தியுள்ளது. ஆட்ட நாயகன் மற்றும் தொடர் நாயகன் விருது, கானர் எஸ்டெர்ஹுசேனுக்கு வழங்கப்பட்டது.

Related Stories: