பொதுமக்களின் மனுக்களை பெற கலெக்டர் அலுவலகத்தில் தனிப்பெட்டி மக்கள் குறைதீர்வு கூட்டம் ரத்தானாலும்

வேலூர், மார்ச் 17: தமிழக சட்டமன்ற தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்ததையொட்டி மக்கள் குறைதீர்வு கூட்டம் ரத்து செய்யப்பட்ட நிலையில் பொதுமக்கள் மனுக்கள் அளிக்க கலெக்டர் அலுவலகத்தில் மனுக்கள் அளிக்கும் பெட்டி வைக்கப்பட்டது. தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 23ம் தேதி நடைபெறுகிறது. இதற்கான தேர்தல் நடத்தை விதிகள் நேற்று முன்தினம் மாலை 4 மணி முதலே அமலுக்கு வந்தது. இதனால் ஒவ்வொரு திங்கட்கிழமை அன்றும் அனைத்து மாவட்ட கலெக்டர் அலுவலகங்களில் நடைபெறும் மக்கள் குறைதீர்வு கூட்டங்கள், விவசாயிகள் குறைதீர்வு கூட்டங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. அதேபோல் ஒவ்வொரு புதன்கிழமை அன்றும் மாவட்ட காவல் அலுவலகத்தில் நடைபெறும் குறைதீர்வு கூட்டமும் ரத்து செய்யப்பட்டுள்ளது. வேலூர் மாவட்டத்தில் மக்கள் குறைதீர்வு கூட்டம் ரத்து செய்யப்பட்ட நிலையில், பொதுமக்கள் தங்கள் குறைகளை தெரிவிக்கும் மனுக்களை அளிக்க வசதியாக கலெக்டர் அலுவலக முகப்பில் மனுக்கள் பெட்டி நேற்று வைக்கப்பட்டது. பொதுமக்கள் தங்கள் கோரிக்கை மனுக்களை இந்த பெட்டியில் செலுத்தலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: