வேலூர், மார்ச் 20: ஆட்டிசம், டவுன் சிண்ட்ரோம், பிறவி குறைபாடு உள்ள குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கு அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சையின்போது முன்னுரிமை அளிக்குமாறு சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது. தமிழ்நாடு மருத்துவக் கல்வி ஆராய்ச்சி இயக்குநரகத்தின் கீழ் 36 அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகள் செயல்பட்டு வருகிறது. இங்கு பல்வேறு அதிநவீன மருத்துவ வசதிகளுடன் நோயாளிகளுக்கு உயர்தர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஆயிரக்கணக்கானோர் தினமும் சிகிச்சை பெற்று செல்கின்றனர். இதனிடையே மனநல குறைபாடு உடையோருக்கான சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் ஆட்டிசம், ஏஎச்டி, செரிப்ரல் பால்சி, டவுன் சிண்ட்ரோம் மற்றும் பலவகை குறைபாடு உள்ள குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் மருத்துவமனை மற்றும் கிளினிக்களில் வரிசைகளில் காத்திருக்கும் போது பல்வேறு சிரமங்களை சந்தித்து வருகின்றனர். இந்த சிரமங்களை தவிர்க்க மருத்துவமனைகளில் முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து இருந்தனர். இந்நிலையில் தற்போது பலதரப்பட்ட குறைபாடு உள்ள குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கு மருத்துவமனைகளில் முன்னுரிமை அளிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இது குறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியதாவது: அறிவுசார் குறைபாடு, ஆட்டிசம், ஏடிஎச்டி, செரிப்ரல் பால்சி, டவுன் சிண்ட்ரோம் மற்றும் அது தொடர்பான வளர்ச்சி குறைபாடு உள்ள நபர்களின், சவால்களை அங்கீகரிக்கும் வகையில் அனைத்து அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சாத்தியமான இடங்களில், அவசரமற்ற நேரங்களில், முன்னுரிமை அளிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. அவசரகால முதலுதவி சிகிச்சை நடைமுறைகள் பாதிக்காமல் செயல்படுத்தலாம். இதுதொடர்பாக மருத்துவக்கல்வி ஆராய்ச்சி இயக்குநர், மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்குநர், பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்புத்துறை இயக்குநரின் கீழ் உள்ள அனைத்து மருத்துவமனைகளுக்கும் உரிய அறிவுரைகள் வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதேபோல் இந்திய மருத்துவ சங்கத்தின் தமிழ்நாடு கிளை சார்பில் இந்த அறிவுரையை தனியார் மருத்துவமனைகளுக்கு வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.
