ரம்ஜான் பண்டிகையையொட்டி திருமங்கலத்தில் ரூ.3 கோடிக்கு ஆடு விற்பனை: தேர்தல் நடத்தை விதிமுறையால் பாதி சேல்ஸ் ‘கட்’

திருமங்கலம்: ரம்ஜான் பண்டிகையையொட்டி திருமங்கலம் ஆட்டுச்சந்தையில் இன்று ரூ.3 கோடிக்கு ஆடுகள் விற்பனையாகின. தேர்தல் நடத்த விதிமுறை காரணமாக விற்பனை பாதியாக குறைந்துள்ளதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர். மதுரை மாவட்டம், திருமங்கலத்தில் வாரந்தோறும் வெள்ளிக்கிழமை ஆட்டுச்சந்தை நடைபெறும். இந்த சந்தைக்கு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், தெலங்கானா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்தும் வெள்ளாடு, செம்மறி ஆடுகள் விற்பனைக்காக கொண்டு வரப்படும்.

மதுரை, திண்டுக்கல், கம்பம், தேனி, விருதுநகர், சிவகாசி, கோவில்பட்டி மற்றும் கேரளம் மாநிலத்தில் இருந்து சந்தைக்கு வரும் வியாபாரிகள் ஆடுகளை வாங்கிச் செல்வர். நாளை ரம்ஜான் கொண்டாடப்பட உள்ள நிலையில், இன்று அதிகாலை 4 மணிக்கே சந்தை கூடியது. ஏராளமான விவசாயிகள் ஆடுகளை விற்பனைக்காக கொண்டு வந்திருந்தனர். ஆனால், தேர்தல் நடத்தை விதிமுறையால் ரூ.50 ஆயிரத்திற்கு மேல் எடுத்துச் செல்ல ஆவணங்கள் வேண்டும் என்பதால் குறைந்த அளவிலேயே வியாபாரிகள் வந்திருந்தனர். 10 கிலோ ஆடு ரூ.8 ஆயிரம் முதல் 10 ஆயிரம் வரை விற்பனையானது. வியாபாரிகள் ஆடுகளை வாங்கி வாகனங்களில் ஏற்றி சென்றனர். ஆனால், எதிர்பார்த்த அளவு விற்பனை இல்லை என கூறப்படுகிறது.

இது குறித்து வியாபாரிகள் கூறுகையில், ‘கடந்த ஆண்டு ரம்ஜான் பண்டிகையையொட்டி நடந்த சந்தையில் ரூ.6 கோடிக்கு ஆடுகள் விற்பனையாகின. ஆனால், இந்தாண்டு இன்று நடந்த சந்தைக்கு ஆடுகள் அதிகளவில் வந்த போதும், தேர்தல் நடத்தை விதிமுறை காரணமாக எதிர்பார்த்த அளவுக்கு வியாபாரிகள் வரவில்லை. இதனால் அதிகாலை முதல் மதியம் 12 மணி வரை நடைபெற்ற சந்தையில் ரூ.3 கோடிக்கு மட்டுமே ஆடுகள் விற்பனையாகின’ என்றார்.

Related Stories: