ஊட்டி தாவரவியல் பூங்காவில் 35ஆயிரம் மலர் செடிகள் பராமரிப்பு பணி தீவிரம்

ஊட்டி: கோடை சீசன் நெருங்கிய நிலையில், ஊட்டி தாவரவியல் பூங்காவில் 35 ஆயிரம் தொட்டிகளில் நடவு செய்யப்பட்டுள்ள மலர் செடிகளை பராமரிக்கும் பணியில் ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். சுற்றுலா நகரமான ஊட்டிக்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர். இங்கு வரும் சுற்றுலா பயணிகளில் பெரும்பாலானவர்கள் அரசு தாவரவியல் பூங்காவிற்கு வருகின்றனர். அண்டை மாநிலமான கேரளா மற்றும் கர்நாடக மாநிலங்களில் இருந்தும் நாள்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்துச் செல்கின்றனர்.

குறிப்பாக, கோடை காலமான ஏப்ரல் மற்றும் ேம மாதங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை என்பதால், ஏராளமான சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம். அவர்களை மகிழ்விக்கும் பொருட்டு ஊட்டி தாவரவியல் பூங்காவில் மலர் கண்காட்சி நடத்தப்படுகிறது. 5 நாட்கள் வரை நடக்கும் இந்த மலர் கண்காட்சியை காண பல லட்சம் சுற்றுலா பயணிகள் வருகின்றனர். இம்முறை சட்டமன்றத் தேர்தல் நடக்க உள்ள நிலையில் மலர் கண்காட்சி நடக்கும் தேதி குறித்து இதுவரை அறிவிப்பு ஏதும் வெளியிடப்படவில்லை.

ஆனால், கோடை சீசனுக்காக தற்போது தாவரவியல் பூங்காவை தயார் செய்யும் பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது. பாத்திகள் மற்றும் தொட்டிகளில் நடவு செய்யப்பட்டுள்ள மலர் நாற்றுக்களை பராமரிக்கும் பணிகளில் ஊழியர்கள் தீவிரம் காட்டி வருகின்றனர். மேலும், 35 ஆயிரம் தொட்டிகளில் செடிகள் நடவு பணி முடிந்த நிலையில், தற்போது மலர் செடிகளுக்கு தண்ணீர் பாய்ச்சி, உரமிட்டு பராமரிக்கும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். பனியின் தாக்கம் குறைந்ததால், தொட்டிகளில் வைக்கப்பட்டிருந்த கோத்தகிரி மிலார் செடிகள் அகற்றப்பட்டு வருகிறது. ஒரு சில மலர் செடிகளில் தற்போது மொட்டுக்கள் காணப்படுகிறது. ஏப்ரல் மாதம் முதல் வாரத்தில் பெரும்பாலான செடிகளில் மலர்கள் பூக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனை சுற்றுலா பயணிகள் கண்டு ரசிக்கலாம்.

Related Stories: