இடைப்பாடியில் 88 மி.மீட்டர் பதிவு: சேலம் மாவட்டத்தில் 2வது நாளாக இடி, மின்னலுடன் கனமழை: வாழை, நெற்பயிர்கள் நாசம்

சேலம்: தமிழகம் முழுவதும் பரவலாக வரும் 24ம் தேதி வரை மழை பெய்வதற்கான வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. அதன்படி சேலம் மாவட்டத்தில் நேற்றிரவு 2வது நாளாக கனமழை பெய்தது. இடைப்பாடி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று நள்ளிரவு முதல் கனமழை பெய்தது. குறிப்பாக நகர பகுதிகளில் மழைநீர் பல இடங்களில் சாக்கடை கழிவுகளோடு நிரம்பி சாலைகளில் ஆறு போல ஓடியது. இடைப்பாடி தாலுகா அலுவலகம், பழைய பேட்டை சுகாதார வளாகம், வெள்ளாண்டி வலசை முனியப்பன் கோயில் சாலை ஆகிய இடங்களில் மழைநீர் குளம் போல தேக்கம ்அடைந்தது. அங்குள்ள முனியப்பன் கோயில் தடுப்பு சுவர் மழைக்கு திடீரென்று இடிந்து விழுந்தது. கொங்கணாபுரம் ஒன்றியத்தில் உள்ள கருங்கல்காடு துளசி பெருமாள் கோவில் பகுதியில் 5 ஏக்கரில் சாகுபடி செய்த செவ்வாழை தோட்டம் முறிந்து நாசமானது. பக்க நாடு பூலாம்பட்டி, கொட்டாயூர், காவேரிப்பட்டி, பொன்னம் பாளையம் உள்ளிட்ட இடங்களிலில் வாழை தோட்டங்கள் வாழைகள் சாய்ந்ததில் விவசாயிகளுக்கு லட்சக்கணக்கான ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

ஆத்தூர், கெங்கவல்லி சுற்று வட்டார பகுதிகளில் நேற்று 2 வது நாளாக, சூறாவளி காற்றுடன் விடிய, விடிய கன மழை பெய்தது. பல கிராமங்களில் நெல் அறுவடைக்காக விவசாயிகள் காத்திருந்த நிலையில், தற்போது பெய்துள்ள மழையால் பல இடங்களில் விவசாய நெற் பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளது. மேலும் பல்வேறு இடங்களில் வாழை, மக்காச்சோளம் உள்ளிட்டவை வேரோடு சாய்ந்து விவசாயிகளுக்கு கவலையை ஏற்படுத்தியுள்ளது. கெங்கவல்லி, நடுவலூர், கடம்பூர், கூட மலை, 74 கிருஷ்ணாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று இரவு இடி, மின்னல் மற்றும் சூறாவளி காற்றுடன் கனமழை கொட்டி தீர்த்தது. இதில் நடுவலூரில் அறுவடைக்கு தயாராக இருந்த நெற் பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளது. சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் 50 ஏக்கரில் பயிரிடப்பட்ட மக்காச்சோளம் சாய்ந்துள்ளது.

சேலம் மாநகர பகுதிகளிலும் நள்ளிரவு இடிமின்னலுடன் கனமழை கெட்டியது. இதனால் சேலம் பழைய பேருந்து நிலையம், கிச்சிப்பாளையம் சாலை, அம்மாபேட்டை, அஸ்தம்பட்டி, நாரணயநகர் உள்ளிட்ட பகுதிகளில் மழைநீர் சாலைகளில் பெருக்கெடுத்து ஓடியது. மாவட்டத்தில் அதிகபட்சமாக இடைப்பாடியில் 88.4 மில்லி மீட்டர் மழை பதிவாகி இருந்தது. சேலம் மாவட்டத்தில் இன்று காலை 6 மணி நிலவரப்படி பதிவான மழை அளவு (மில்லி மீட்டரில்): சேலம் கலெக்டர் அலுவலகம் 41.3, புழுதிகுட்டை 15, ஆத்தூர் 15.6, கெங்கவல்லி 12, தம்மம்பட்டி 11, கரியகோயில் 12, சங்ககிரி 81, இடைப்பாடி 88.4, மேட்டூர் 58.8, டேனிஷ்பேட்டை 21 என மாவட்டம் முழுவதும் 384 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது.

Related Stories: