சென்னை: ரம்ஜான் பண்டிகையையொட்டி அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
வைகோ-மதிமுக பொதுச் செயலாளர்
ஏழை, எளிய மக்களுக்கு ஜக்காத் என்னும் நன்கொடைகளை வாரி வழங்கி, ஈது பெருநாளில் ஈத்துவக்கும் மகிழ்ச்சியில் திளைக்கின்ற இஸ்லாமிய பெருமக்களுக்கு வாழ்த்து.
ஜி.கே.வாசன்-தமாகா தலைவர்
ரம்ஜான் பண்டிகையை கொண்டாடும் இஸ்லாமிய சகோதர சகோதரிகளுக்கு இல்லாமை நீங்கவும், இன்பங்கள் பெருகவும், வளம் நிறையவும் வாழ்த்து.
எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி
உடலையும், உள்ளத்தையும் ஒருநிலைப்படுத்தி, தூய்மை உணர்வோடு புனித ரமலான் மாதத்தில் நோன்பிருந்து, ஈகையின் சிறப்பினை எல்லோருக்கும் உணர்த்தும் வகையில், ஈட்டிய செல்வத்தில் ஒரு பங்கை ஏழை, எளியோருக்கு அளித்து, அனைவரும் இன்புற்று வாழ்ந்திட வேண்டி இறைவனைத் தொழுது, ரம்ஜான் பண்டிகையைக் கொண்டாடும் இஸ்லாமிய சகோதர, சகோதரிகளுக்கு இறைவன் அனைத்து நலன்களையும் வழங்கிட பிரார்த்திக்கிறேன்.
டிடிவி. தினகரன் – அமமுக பொதுச்செயலாளர்
பசித்தவர்களுக்கு உணவளியுங்கள், நோய்வாய்ப்பட்டவர்களுக்கு உதவுங்கள், துன்புற்றவர்களுக்கு உறுதுணையாக இருங்கள், அயலார்களிடம் அன்பு செலுத்துங்கள் போன்ற இறைத்தூதர் நபிகள் நாயகத்தின் போதனைகளை மனதில் நிறுத்தி, உடலையும் உள்ளத்தையும் ஒருநிலைப்படுத்தி தூய்மை உணர்வோடு ரமலான் நோன்பு இருந்த இஸ்லாமியச் சகோதர, சகோதரிகள் அனைவரின் எண்ணங்களும் விருப்பங்களும் ஈடேரற்றும் என இந்நாளில் பிரார்த்திப்போம்.
செல்வப்பெருந்தகை காங்கிரஸ் தலைவர்
ஒழுக்கம், தியாகம், மனிதநேயம் ஆகிய உயர்ந்த பண்புகளை உலகிற்கு எடுத்துக்காட்டும் முஸ்லிம் சமூகத்தின் பண்புகள் பாராட்டத்தக்கது. அன்பு, பகிர்வு மற்றும் சகோதரத்துவத்தை நடைமுறையில் கடைபிடிக்கும் இவர்களின் வாழ்க்கை முறை அனைவருக்கும் முன்மாதிரியாக விளங்குகிறது.
அன்புமணி-பாமக தலைவர்
இஸ்லாமியர்களை உன்னதமாக்கும் திருநாளே இரமலான். இஸ்லாம் போதிக்கும் நற்குணங்கள் அனைத்தும் உலகமெங்கும் நிறைய வேண்டும். உலகம் முழுவதும் அன்பு, நல்லிணக்கம், சகிப்புத் தன்மை, சகோதரத்துவம், ஈகை உள்ளிட்ட நற்குணங்கள் பெருகவும், அமைதி, வளம், முன்னேற்றம், ஒற்றுமை, மகிழ்ச்சி, கல்வி, வளர்ச்சி ஆகியவை தழைக்கவும் உழைக்க அனைவரும் உறுதியேற்போம்.
எர்ணாவூர் நாராயணன் சமத்துவ மக்கள் கழக தலைவர்
இந்த நாள் அனைவருக்கும் நல்ல ஆரோக்கியம், மகிழ்ச்சி, செழிப்பு, சமுதாயத்தில் அமைதி மற்றும் சகோதரத்துவத்தை வளர்க்கட்டும். நபிகள் நாயகத்தின் போதனைகளைக் கருத்தில்கொண்டு அனைவரும் தங்கள் கடமைகளை செவ்வனே மேற்கொண்டு வாழ வேண்டும்.
இந்திய ஹஜ் அசோஷியேஷன் தலைவர் பிரசிடென்ட் அபூபக்கர்
இந்த ரம்ஜான் நாள் தொடங்கி அனைவருக்கும் அமைதியும், மகிழ்ச்சியும், முழு உடல் ஆரோக்கியமும் கிடைக்க வேண்டும் என்று எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன். சமய நல்லிணக்கம், அன்பு, கருணை கொண்டு ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து ஒற்றுமையாய் வீடும்,நாடும் சிறக்கட்டும்.
இதேபோல, புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம், பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன், புரட்சிபாரதம் கட்சி தலைவர் ஜெகன்மூர்த்தி, விஜய் வசந்த் எம்.பி, தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா, நமதுரிமை காக்கும் கட்சி பொதுச்செயலாளர் டாக்டர் செங்கை பத்மநாபன், இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பின் நிறுவனர் மற்றும் தேசியத் தலைவர் டாக்டர் ஆ.ஹென்றி , தேசிய நாடார் சங்க பொதுச் செயலாளர் விஜயகுமார், இந்திய தேசிய ரியல் எஸ்டேட் லேண்ட் டெவெலபேர்ஸ் நிலத்தரகர்கள் சங்க தலைவர் வி.என்.கண்ணன், தமிழ்நாடு யாதவ மகா சபை தலைவர் நாசே.ராமச்சந்திரன் உள்ளிட்டோர் இஸ்லாமியர்களுக்கு ரமலான் வாழ்த்துத் தெரிவித்துள்ளனர்.
