பழநி: திண்டுக்கல் மாவட்டம், பழநி அருகே உள்ள பாலசமுத்திரம், செம்மாட்டுப்பாறை, ஆனைப்பாறை, அய்யம்புள்ளி பகுதிகள் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தில் உள்ள பொருந்தல், பெரியம்மாபட்டி, நெய்க்காரப்பட்டி பகுதிகளில் சுமார் 300 ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் நெல் பயிரிட்டிருந்தனர். இவைகள் அறுவடைக்கு தயாராக இருந்தன. இந்நிலையில், பழநி பகுதியில் நேற்று முன்தினம் இரவு சூறாவளி காற்றுடன் கனமழை பெய்தது.
பழநி நகர் பகுதியில் 14 மி.மீ மழை பதிவாகி இருந்தது. இந்த மழையால் அறுவடைக்கு தயாராக இருந்த 300 ஏக்கர் நெற்பயிர் நீரில் மூழ்கி நாசமடைந்துள்ளன. இது குறித்து அப்பகுதி விவசாயிகள் கூறுகையில், ‘மழைநீரில் நெற்பயிர்கள் மூழ்கி அழுகும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் பெரிய அளவில் இழப்பு ஏற்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து, சேதமடைந்த பயிர்களுக்கு இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றனர்.
