அரசியல் கட்சிகள் முன் அனுமதி இல்லாமல் விளம்பரங்கள் வெளியிட தடை: தேர்தல் ஆணையம் உத்தரவு!

 

சென்னை: அரசியல் கட்சிகள் மற்றும் வேட்பாளர்கள் விளம்பரங்கள் வெளியிடுவதற்கு முன் கட்டாயமாக தேர்தல் ஆணையத்தின் அனுமதி பெற வேண்டும் என தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்; .

அரசியல் விளம்பரங்களுக்கான முன்-சான்றிதழ்

மின்னணு அல்லது சமூக ஊடகங்களில் அரசியல் விளம்பரங்களை வெளியிட விரும்பும் அனைத்து அரசியல் கட்சிகள் (அங்கீகரிக்கப்பட்ட மற்றும் அங்கீகரிக்கப்படாதவை), போட்டியிடும் வேட்பாளர்கள் மற்றும் இதர நபர்கள், மாநில அல்லது மாவட்ட அளவிலான ஊடகச் சான்றளிப்பு மற்றும் கண்காணிப்புக் குழுவிடம் (MCMC) முன்-சான்றிதழ் பெற வேண்டும். அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் மற்றும் வேட்பாளர்கள் ஒளிபரப்பிற்கு குறைந்தது 3 நாட்களுக்கு முன்னதாக விண்ணப்பிக்க வேண்டும். அங்கீகரிக்கப்படாத கட்சிகள் மற்றும் பிற விண்ணப்பதாரர்கள் 7 நாட்களுக்கு முன்னதாக விண்ணப்பிக்க வேண்டும்.

பெறப்படும் விண்ணப்பங்கள் 48 மணி நேரத்திற்குள் பரிசீலிக்கப்படும். விண்ணப்பங்கள் மீதான முடிவுகள் குறித்த மேல்முறையீடுகளை மாநில அளவிலான மேல்முறையீட்டுக் குழுவிடமும், அதன்பின் இந்தியத் தேர்தல் ஆணையத்திடமும் செய்யலாம். இந்தக் குழுக்கள் அரசியல் விளம்பரங்களை ஆய்வு செய்து சான்றளிக்கவும், ‘கட்டணச் செய்திகள்’ (Paid News) உள்ளிட்ட ஊடகத் தளங்களின் தவறான பயன்பாட்டைத் தடுக்கவும் அமைக்கப்பட்டுள்ளன.

2. செயற்கை நுண்ணறிவு (AI) மூலம் உருவாக்கப்பட்ட உள்ளடக்கங்களுக்கான வழிகாட்டுதல்கள்

‘ஆழ் மாறாட்டம்’ (Deepfakes) மற்றும் செயற்கை நுண்ணறிவு மூலம் உருவாக்கப்பட்ட உள்ளடக்கங்களால் ஏற்படும் சவால்களைக் கருத்தில் கொண்டு, தேர்தல் ஆணையம் கடுமையான வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது: செயற்கை நுண்ணறிவு மூலம் உருவாக்கப்பட்ட அல்லது டிஜிட்டல் முறையில் மாற்றப்பட்ட அனைத்து உள்ளடக்கங்களிலும் “AI-ஆல் உருவாக்கப்பட்டது”, “டிஜிட்டல் முறையில் மேம்படுத்தப்பட்டது” அல்லது “செயற்கை உள்ளடக்கம்” போன்ற தெளிவான லேபிள்கள் இருக்க வேண்டும். இது காட்சிப் பரப்பில் குறைந்தது 10% அல்லது ஆடியோ உள்ளடக்கத்தின் ஆரம்ப 10% நேரத்தை உள்ளடக்கியதாக இருக்க வேண்டும்.

ஒருவரின் அனுமதி இன்றி அவரது அடையாளம், குரல் அல்லது தோற்றத்தை தவறாகச் சித்தரிக்கும் மற்றும் வாக்காளர்களை திசைதிருப்பக்கூடிய உள்ளடக்கங்கள் முற்றிலுமாகத் தடை செய்யப்பட்டுள்ளன. அரசியல் கட்சிகளின் சமூகவலைதள பக்கங்களில் இத்தகைய தவறான அல்லது சட்டவிரோத உள்ளடக்கங்கள் கண்டறியப்பட்டாலோ அல்லது அது குறித்து புகார் அளிக்கப்பட்டாலோ, 3 மணி நேரத்திற்குள் அவை நீக்கப்பட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

3. வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கான (BLO) ஊதியம் உயர்வு (2025–2026)

பிழையற்ற வாக்காளர் பட்டியலே துடிப்பான ஜனநாயகத்தின் அடிப்படை என்பதை இந்தியத் தேர்தல் ஆணையம் வலியுறுத்துகிறது. அந்தந்த வாக்குச்சாவடி பகுதிகளில் வாக்காளர் பட்டியலின் துல்லியம் மற்றும் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்வதில் வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் (BLOs) முக்கியப் பங்கு வகிக்கின்றனர். தற்போது, தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணியில் மொத்தம் 75,037 அலுவலர்கள் ஈடுபட்டுள்ளனர். அவர்களின் அர்ப்பணிப்பைப் பாராட்டும் வகையில், அவர்களின் ஆண்டு ஊதியம் ரூ. 6,000-லிருந்து ரூ. 12,000-ஆக இரட்டிப்பாக்கப்பட்டுள்ளது.

கூடுதலாக, சிறப்புத் திருத்தப் பணிகளுக்காக (SSR/SR) ரூ.2,000 சிறப்பு ஊக்கத்தொகையும் வழங்கப்படுகிறது. இதன்படி, 2025–2026 ஆம் ஆண்டிற்காக தமிழ்நாடு முழுவதும் உள்ள BLO-க்களுக்கு மொத்தம் ரூ. 99,81,54,000/- (ரூபாய் தொண்ணூற்று ஒன்பது கோடியே எண்பத்தியோரு லட்சத்து ஐம்பத்தி நான்காயிரம் மட்டும்) நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

4. அடுக்குமாடி குடியிருப்புகளில் வாக்குச்சாவடிகள்
நகர்ப்புற வாக்காளர்களின் ஆர்வமின்மையைக் குறைக்கும் வகையில், உயரமான அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் குழு வீட்டு வசதி சங்க வளாகங்களுக்குள்ளேயே வாக்குச்சாவடி வசதிகளைத் தேர்தல் ஆணையம் ஏற்படுத்தியுள்ளது. இதன்படி, 2026 சிறப்புத் தீவிரத் திருத்தத்தின் (SIR) போது இத்தகைய இடங்களில் 14 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

Related Stories: