சேலம் பள்ளப்பட்டியில் தனியாருக்கு சொந்தமான மஞ்சள் குடோனில் பயங்கர தீ விபத்து

சேலம்: சேலம் பள்ளப்பட்டி அருகே தனியாருக்கு சொந்தமான மஞ்சள் குடோனில் இன்று அதிகாலை பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில் பல லட்சம் மதிப்பிலான மஞ்சள் மூட்டைகள் எரிந்து சேதமானது. சேலம் பள்ளப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் பாஸ்கர் (43). இவருக்கு சொந்தமான மஞ்சள் குடோன் சூரமங்கலம் மெயின் ரோட்டில் உள்ளது. இதில் சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யப்பட்ட மஞ்சள் மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டு இருந்தது. நேற்று இரவு வழக்கம் போல் பணியாளர்கள் மஞ்சள் குடோனை மூடிவிட்டு சென்றனர். இதனிடையே இன்று அதிகாலை 5 மணி அளவில் மஞ்சள் குடோனில் இருந்து கரும்புகை வௌிவந்துள்ளது. இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் சூரமங்கலம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் மாவட்ட தீயணைப்பு உதவி அலுவலர் சிவக்குமார் தலைமையிலான தீயணைப்பு குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மஞ்சள் குடோனில் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

தொடர்ந்து சூரமங்கலம் மற்றும் செவ்வாய்பேட்டை தீயணைப்பு நிலையங்களில் இருந்து, கூடுதலான எண்ணிக்கையில் தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டன. 15க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் சுமார் 3 மணி நேரத்திற்கும் ேமலாக தண்ணீரை பீய்ச்சி அடித்து, தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். மேலும், ஜேசிபி வாகனங்கள் வரவழைக்கப்பட்டு, கொழுந்து விட்டு எரிந்த தீயை கிளறி தண்ணீரை பீய்ச்சி அடித்து முழுமையாக தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தில் பல லட்சம் மதிப்பிலான மஞ்சள் மூட்டைகள் தீயில் கருகி நாசமானது. போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் மின்கசிவு காரணமாக தீவிபத்து ஏற்பட்டு இருக்கலாம் என தெரிவித்தனர். தொடர்ந்து பள்ளப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதுகுறித்து குடோன் உரிமையாளர்கள் கூறுகையில்,“சேலம் மாவட்டம் மட்டுமின்றி பல்வேறு பகுதிகளில் இருந்து மஞ்சள் கொள்முதல் செய்யப்பட்டு தரம் பிரிக்கப்பட்டு குடோனில் அடுக்கி வைக்கப்பட்டிருந்தது. தரம் வாரியாக சுமார் 4000 மூட்டைகள் வைக்கப்பட்டு இருந்தது. தீ விபத்து ஏற்பட்டவுடன் ஒரு பகுதியில் இருந்த மஞ்சள் மூட்டைகளை மற்றொரு குடோனில் மாற்றி வைத்துள்ளோம்,’’என்றனர்.

Related Stories: