சமையல் காஸ் தட்டுப்பாடு நீடிப்பு இயற்கை எரிவாயு திட்டத்தை உடனே துரிதப்படுத்த உத்தரவு: மாநிலங்களுக்கு ஒன்றிய அரசு அறிவுறுத்தல்

புதுடெல்லி: ஈரான் போரால் நாடு முழுவதும் சமையல் காஸ் சப்ளை அடியோடு முடங்கி விட்டது. இந்த குழாய் மூலம் வீடுகளுக்கு வழங்கப்படும் இயற்கை எரிவாயு திட்டங்களை விரைவாகச் செயல்படுத்தவும், சமையல் எரிவாயு கிடைப்பதில் உள்ள அழுத்தத்தைக் குறைக்கவும், அத்திட்டங்களுக்கான ஒப்புதல்களை விரைவுபடுத்துமாறு ஒன்றிய அரசு, மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தி உள்ளது. இதுதொடர்பாக ஒன்றிய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகத்தின் இணைச் செயலாளர் சுஜாதா சர்மா கூறுகையில்,’மேற்கு ஆசியாவில் போர் தொடர்வதால், இந்தியாவின் கிட்டத்தட்ட 60 சதவீத எல்பிஜி விநியோகம் தடைபட்டுள்ளது.

இப்போர் எப்போது முடியும் எனத் தெரியாத நிலையில், இண்டக்ஷன் குக்கர்கள் போன்ற மாற்று சமையல் முறைகளைப் பயன்படுத்த வேண்டும். தற்போதைய நிலைமை கவலையளிப்பதாகவே உள்ளது, ஆனால் நாங்கள் வீட்டு உபயோக நுகர்வோருக்கு முன்பைப் போலவே விநியோகம் செய்து வருகிறோம். நாம் மாற்று வழிகளைப் பார்க்க வேண்டும். எல்பிஜி மீதான அழுத்தத்தைக் குறைக்க, வணிக மற்றும் வீட்டு உபயோக எல்பிஜி பயனர்களை குழாய் வழி இயற்கை எரிவாயுவிற்கு மாறுமாறு அரசாங்கம் ஊக்குவித்து வருகிறது. நகர எரிவாயு நிறுவனங்கள் ஊக்கத்தொகைகளையும் வேகமான இணைப்புகளையும் வழங்குகின்றன. எனவே நகர எரிவாயு திட்டங்களுக்கான ஒப்புதல்களை விரைவுபடுத்துமாறு கோரி, ஒன்றிய அரசு மார்ச் 16 அன்று அனைத்து மாநில அரசுகளுக்கும் கடிதம் எழுதியுள்ளது.

பெரிய நகர எரிவாயுக் குழாய்களுக்கான நிலுவையில் உள்ள விண்ணப்பங்களுக்கு அனுமான அனுமதி வழங்கவும், புதிய நகர எரிவாயுத் திட்டங்களுக்கு 24 மணி நேரத்திற்குள் ஒப்புதல் அளிக்கவும், சாலை சீரமைப்பு கட்டணங்களைத் தள்ளுபடி செய்யவும், மற்றும் பணி அட்டவணைகளைத் தளர்த்தவும் கேட்டுக்கொண்டுள்ளோம். மேலும், மாநிலங்களுக்கு கூடுதலாக 48,000 கிலோலிட்டர் மண்ணெண்ணெய் வழங்கப்பட்டுள்ளது. பீகார், சத்தீஸ்கர், குஜராத், கேரளா, மணிப்பூர், தமிழ்நாடு, உத்தரப் பிரதேசம் மற்றும் கர்நாடகா ஆகிய மாநிலங்கள் இந்த கூடுதல் ஒதுக்கீட்டிலிருந்து மண்ணெண்ணெய் பெற்றுள்ளது. இவ்வாறு தெரிவித்தார்.

* பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்படுமா?
கச்சா எண்ணெய் விலை உயர்ந்து வரும் நிலையில் இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்படுமா என்ற கேள்விக்கு சுஜாதா சர்மா கூறுகையில்,’பெட்ரோல் மற்றும் டீசல் சப்ளை நிலையாக உள்ளது. கச்சா எண்ணெய் விலை உயர்ந்த போதும் இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் தற்போதைக்கு மாற்றமின்றி இருக்கும்’ என்றார்.

* கத்தாரில் சிக்கிய 1600 இந்தியர்கள் நாடு திரும்பினர்
வான்வெளி கட்டுப்பாடுகளுக்கு மத்தியில் 5 கத்தார் ஏர்வேஸ் விமானங்கள் மூலம் 1,600 இந்தியர்கள் தாயகம் திரும்பினர். இந்திய பயணிகளை ஏற்றிக்கொண்டு டெல்லிக்கு 2 விமானங்களும், மும்பை, கொச்சி மற்றும் திருவனந்தபுரத்திற்கு தலா ஒரு விமானமும் வந்தது. மேலும் சல்வா தரைவழி எல்லையைக் கடந்து சவுதி அரேபியா வழியாக இந்தியா செல்ல விரும்பும் இந்தியக் குடிமக்களுக்குத் தேவையான தற்காலிக சவுதிப் போக்குவரத்து விசாக்களை வழங்குவதாகவும் கத்தார் அரசு அறிவித்துள்ளது.

Related Stories: