சிவகாசி, மார்ச் 18: சிவகாசி அருகே வீட்டை உடைத்த மர்மநபர்கள் தங்க நகைகள் என நினைத்து கவரிங் நகைகளை திருடிச் சென்ற சம்பவம் நடந்துள்ளது.
சிவகாசி அருகே சித்துராஜபுரம் தேவிநகரை சேர்ந்தவர் சுப்பிரமணியன்(71). இவர் கடந்த 1ம் தேதி பெங்களூருவில் உள்ள தனது மகள்களை பார்க்க மனைவியுடன் சென்றார். பின்னர் அவர் வீடு திரும்பிய போது வீட்டின் கதவு திறந்து கிடந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த சுப்பிரமணியன் வீட்டின் உள்ளே சென்ற போது அங்கு இருந்த பீரோ உடைக்கப்பட்டு இருந்தது. பீரோவை பார்த்த போது அதில் வைக்கப்பட்டிருந்த ரூ.1000 மதிப்புள்ள கவரிங் நகைகள் மாயமானது தெரியவந்தது. தங்க நகை என நினைத்து கவரிங் நகைகளை திருடர்கள் எடுத்து சென்றது தெரியவந்தது. தனது வீட்டில் நடைபெற்ற திருட்டு சம்பவம் குறித்து சிவகாசி டவுன் போலீசில் சுப்பிரமணியன் புகார் கொடுத்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
