இஸ்லாமாபாத்: ஈரான் – இஸ்ரேல் போர் 2வது வாரத்தை எட்டியுள்ள நிலையில் தாக்குதல்கள் நடந்து வருகின்றன. அங்கு நிலைமை மோசமாகி வரும் சூழலில், அதன் பாதிப்பு சர்வதேச அளவில் எதிரொலிக்க ஆரம்பித்துள்ளது. இந்த போரால் பாகிஸ்தானில் கடும் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. எரிபொருள் நெருக்கடியை சமாளிக்க, பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப், பல கடுமையான நடவடிக்கைகளை அறிவித்துள்ளார். அரசு வாகனங்கள் இயக்கத்துக்கு தடை, அமைச்சர்கள் வெளிநாட்டு பயணங்கள் ரத்து, ஊழியர்கள் சம்பளக் குறைப்பு உள்ளிட்ட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அரசு மற்றும் தனியார் துறைகளில் பணிபுரியும் ஊழியர்கள் வாரத்தில் 4 நாட்கள் மட்டும் அலுவலகங்களில் பணிபுரிய வேண்டும் , 50 சதவீத ஊழியர்கள் வீட்டிலிருந்து பணியாற்ற வேண்டும் என்றும் ஷெபாஸ் ஷெரீப் அறிவித்தார். இதற்கிடையே சிக்கன நடவடிக்கையாக, அரசு அமைப்புகள், தன்னாட்சி நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கு 5 முதல் 30 % சம்பள குறைப்பை பாகிஸ்தான் அறிவித்துள்ளது.
