பெய்ரூட்: லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் இஸ்ரேல் நடத்திய அதிரடி வான்வழித் தாக்குதலில் ஹிஸ்புல்லா அமைப்பின் முக்கிய தளபதி கொல்லப்பட்டார். கடந்த 2024ம் ஆண்டில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் ஹிஸ்புல்லா அமைப்பின் வான்வழிப் பிரிவு கமாண்டராக இருந்த முகமது ஸ்ரூர் கொல்லப்பட்டார். இதன் தொடர்ச்சியாக, நேற்று பெய்ரூட்டின் தெற்குப் பகுதியில் அமைந்துள்ள லெபனான் பல்கலைக்கழக வளாகத்தை குறிவைத்து இஸ்ரேல் விமானப்படை தாக்குதல் நடத்தியது.
இதில் ஹிஸ்புல்லா அமைப்பின் முக்கிய நிர்வாகியான பேராசிரியர் மொர்தாடா ஸ்ரூர் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் ராணுவம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. கொல்லப்பட்ட மொர்தாடா ஸ்ரூர், வேதியியல் விரிவுரையாளராகப் பணியாற்றி வந்தாலும், ஹிஸ்புல்லா அமைப்பிற்குத் தேவையான ஆயுதங்களைத் உள்நாட்டிலேயே தயாரிக்கும் தொழில்நுட்பத்தில் முன்னணி நிபுணராகவும் நீண்டகால திட்ட வகுப்பாளராகவும் செயல்பட்டு வந்தார் என்று இஸ்ரேல் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ‘ஆபரேஷன் ரோரிங் லயன்’ என்ற பெயரில் இஸ்ரேல் நடத்தி வரும் இந்த தீவிரமான தாக்குதலில், கடந்த சில நாட்களில் மட்டும் ஹிஸ்புல்லாவின் பல முக்கிய இலக்குகள் அழிக்கப்பட்டுள்ளன.
குறிப்பாக, ரத்வான் படையின் மூத்த கமாண்டர் அபு அலி ரையான் கொல்லப்பட்டதையும், ஹிஸ்புல்லாவின் பொருளாதாரப் பிரிவாகச் செயல்படும் அல்-கார்ட் அல்-ஹசன் சங்கத்தின் கிளைகள் தகர்க்கப்பட்டதையும் இஸ்ரேல் உறுதிப்படுத்தியுள்ளது. மேலும் லிதானி ஆற்றின் குறுக்கே உள்ள தயர் ஃபல்சே மேம்பாலத்தை தகர்த்ததன் மூலம், லெபனானின் வடக்கு மற்றும் தெற்குப் பகுதிகளுக்கு இடையிலான போக்குவரத்தை இஸ்ரேல் துண்டித்துள்ளது.
