தமிழ்நாட்டில் 2009ம் ஆண்டு பிப்ரவரி மாதம் திருப்பூரைச் சேர்ந்த பெஸ்ட் ராமசாமியால் தொடங்கப்பட்ட கொங்கு நாடு முன்னேற்ற கழகம் அதே ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் எந்தவித கூட்டணியும் இன்றி தனித்துப் போட்டியிட்டது. அப்போது திருப்பூர், கோவை, ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில் 12 தொகுதிகளில் போட்டியிட்டு சுமார் 6 லட்சம் வாக்குகளை பெற்று அனைவரையும் வியக்க வைத்தது. குறிப்பாக கோவை, ஈரோடு, கருர், திருப்பூர் உள்ளிட்ட மேற்கு மண்டல மாவட்டங்களில் பின்னலாடைத் தொழில் சார்ந்த தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளின் ஆதரவுடன் ஒரு மாற்று சக்தியாக உருவெடுத்தது. இக்கட்சிக்குக் கிடைத்த அமோக ஆதரவு பாரம்பரியக் கட்சிகளையே அதிர வைத்தது.
2011ம் ஆண்டு திமுக கூட்டணியில் 7 சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்டு கணிசமான வாக்கு சதவிகிதத்தை பெற்றது. ஆனால், 2013ல் ஏற்பட்ட உட்கட்சிப் பிளவுக்குப் பிறகு, இக்கட்சியின் வாக்கு வங்கி சிதறியது. அதற்கு பிறகு நடைபெற்ற சட்டமன்ற தேர்தல்களில் அதிமுகவிற்கும், நாடாளுமன்ற தேர்தலில் பாஜவிற்கும் ஆதரவளித்தது. ஜெயலலிதா மறைவிற்கு பிறகு தமிழகத்தில் நடைபெற்ற தேர்தல்களில் அதிமுக-பாஜவின் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு தனது நிபந்தனையற்ற ஆதரவை வழங்கியது.
மேற்கு மண்டலமான கொங்கு மண்டலத்தில் மிகப் பெரும் செல்வாக்கு கொண்ட கட்சியாக இருந்தும் தே.ஜ.கூட்டணியில் உரிய அங்கீகாரம் வழங்கி இடங்கள் ஒதுக்கப்படாததால் தேர்தலில் போட்டியிடாமல் கடந்த 2022 செப்டம்பர் மாதம் தேர்தல் ஆணையத்தால் கட்சியின் அங்கீகாரமும் ரத்து செய்யப்பட்டது. அங்கீகாரம் ரத்தான நிலையிலும் வரவுள்ள 2026 சட்டமன்ற தேர்தலிலும் தே.ஜ.கூட்டணியில் தொடர்வதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து ஆதரவை தெரிவித்துள்ளது கொங்கு நாடு முன்னேற்ற கழகம்.
இக்கட்சியின் இந்தத் தொடர் ஆதரவு அரசியல் அதன் தனித்துவத்தைச் சிதைத்ததோடு, நேரடியாகத் தேர்தலில் போட்டியிடாமல் வெறும் ஆதரவு அமைப்பாக மாறி வருவது அடிமட்டத் தொண்டர்களிடையே சோர்வை ஏற்படுத்தியுள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். இக்கட்சியிலிருந்து பிரிந்து சென்ற ஈ.ஆர்.ஈஸ்வரன் தலைமையிலான கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி திமுக கூட்டணியில் இணைந்து சட்டமன்றம் மற்றும் நாடாளுமன்றத்தில் தனது பிரதிநிதித்துவத்தை உறுதி செய்துள்ளது. 2009ம் ஆண்டு மேற்கு மண்டலத்தில் பெரும் மாற்றுசக்தியாக உருவான கொங்கு நாடு முன்னேற்ற கழகம் அதிமுக-பாஜ கூட்டணியில் இணைந்ததால் தனது அங்கீகாரத்தை இழந்து அரசியல் கட்சி என்ற அடையாளத்தையும் இழக்கத்தொடங்கியுள்ள நிலையில் மீண்டும் அங்கீகாரம் பெற முயலுமா என்பது அக்கட்சியினருக்கே தெரியாத கேள்விக்குறியாக உள்ளது.
* எஸ்.பி.வேலுமணியின் உறவினருக்கு சீட்? மாஜி அமைச்சர் அப்செட்
திருப்பூர் மாவட்டத்தில் மிகப்பெரிய தொகுதி பல்லடம். இதன் தற்போதைய எம்எல்ஏ எம்.எஸ்.எம்.ஆனந்தன். அதிமுகவை சேர்ந்த இவருக்கு இந்த தொகுதியில் இனி வாய்ப்பு கிடையாது என்பதால் வேறு தொகுதிக்கு கவனத்தை திருப்பியுள்ளார். இருப்பினும் பல்லடம் தொகுதியில் போட்டியிட அதிமுக சார்பில் மும்முனை போட்டி நிலவி வருகிறது. ஏற்கனவே இந்த தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் கரைப்புதூர் நடராஜன். முன்னாள் எம்எல்ஏவான இவர், தற்போது வடக்கு ஒன்றிய செயலாளராக இருந்து வருகிறார். கடந்த முறை சீட்டை விட்டு கொடுத்த அவர் இந்த முறை சீட்டை பெற்றே தீர வேண்டும் என முயற்சி செய்து வருகிறார்.
இதற்காக தனது ஆதரவாளர்களுடன் அதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறார். இதேபோல் பொங்கலூர் மேற்கு ஒன்றிய செயலாளராக இருப்பவர் யு.எஸ்.பழனிச்சாமி. எஸ்.பி.வேலுமணியின் உறவினரான இவரும் சீட் பெற முயற்சி மேற்கொண்டு வருகிறார். இந்த போட்டிகளுக்கு மத்தியில் முன்னாள் அமைச்சர் செ.ம.வேலுச்சாமியும் மல்லுக்கட்டி வருகிறார். எஸ்.பி.வேலுமணி, தனது உறவினர் யு.எஸ்.பழனிச்சாமிக்காக எடப்பாடி பழனிசாமியிடம் பேசியதாகவும், பல்லடம் தொகுதியில் அவருக்கு எடப்பாடி பச்சைக்கொடி காட்டியதாகவும் கூறப்படுகிறது. இதனால் கரைப்புதூர் நடராஜன், செ.ம.வேலுச்சாமி ஆதரவாளர்கள் அப்செட்டில் உள்ளனர்.
