சென்னை: இளநிலை நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசம் நாளையுடன் நிறைவடைகிறது. மே 3ம் தேதி நடைபெற உள்ள ‘நீட்’ தேர்வுக்கு இதுவரை, நாடு முழுவதும் இருந்து 22 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் விண்ணப்பித்துள்ளனர். இந்நிலையில் விண்ணப்பிக்கும் கால அவகாசம் வரும் 11ம் தேதி (நாளை) வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் அரசு, தனியார் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள எம்பிபிஎஸ், பிடிஎஸ், சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஓமியோபதி மற்றும் கால்நடை மருத்துவப் படிப்புகளுக்கு அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்கள் தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வில் (நீட்) தேர்ச்சி பெறுபவர்களைக் கொண்டு நிரப்பப்படுகின்றன. அதேபோல, ராணுவக் கல்லூரிகளில் பிஎஸ்சி நர்சிங் படிப்புக்கான மாணவர் சேர்க்கைக்கும் நீட் தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஆண்டுதோறும் நீட் தேர்வை தேசிய தேர்வுகள் முகமை (என்டிஏ) நடத்தி வருகிறது.
அந்த வகையில், 2026-27ம் கல்வி ஆண்டுக்கான நீட் தேர்வுக்கு விண்ணப்பிப்பது கடந்த பிப்.8ம் தேதி https://neet.nta.nic.in என்ற இணையதளத்தில் தொடங்கியது. மார்ச் 8ம் தேதி நள்ளிரவு 11.50 மணியுடன் ஆன்லைனில் விண்ணப்பிப்பது நிறைவடைய இருந்த நிலையில், மாணவ, மாணவிகளின் வேண்டுகோளை ஏற்று விண்ணப்பிக்கும் கால அவகாசத்தை வரும் 11ம் தேதி (நாளை) நள்ளிரவு 11.50 வரை நீட்டித்து தேசிய தேர்வுகள் முகமை அறிவித்துள்ளது. மே 3ம் தேதி பிற்பகல் 2 மணி முதல் மாலை 5 மணி வரை தேர்வு நடைபெற உள்ளது. தமிழகத்தில் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், திருச்சி, மதுரை, கோவை உள்ளிட்ட 30 நகரங்கள் உள்பட நாடு முழுவதும் 552 நகரங்களில் தேர்வு நடக்கிறது. துபாய், அபுதாபி, தோகா, மஸ்கட், ரியாத், சிங்கப்பூர் என வெளிநாடுகளில் 14 இடங்களிலும் தேர்வு நடைபெறுகிறது.
தேர்வுமையம், ஹால் டிக்கெட் விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும். தமிழ், ஆங்கிலம், இந்தி உள்பட 13 மொழிகளில் தேர்வு நடைபெறும். மொத்தம் 180 கேள்விகள் கேட்கப்படும். ஒரு கேள்விக்கு 4 மதிப்பெண் என மொத்தம் 720 மதிப்பெண்கள். தாவரவியல், விலங்கியலை உள்ளடக்கிய உயிரியல் பாடத்தில் இருந்து 360 மதிப்பெண்கள், இயற்பியல், வேதியியல் பாடங்களில் தலா 180 மதிப்பெண்களுக்கு கேள்விகள் இடம்பெறும். தவறான பதிலுக்கு 1 மதிப்பெண் (நெகட்டிவ்) குறைக்கப்படும். தேசிய மருத்துவ ஆணையத்தின் (என்எம்சி) https://www.nmc.org.in என்ற இணையதளத்தில் தேர்வுக்கான பாடத் திட்டங்கள் வெளியிடப்பட்டுள்ளன. அதன் அடிப்படையில் தேர்வில் கேள்விகள் இடம் பெறும்.
