விளையாட்டு விடுதி மாணவ, மாணவிகளுக்கு ரூ.71.15 லட்சம் செலவில் சாம்பியன்ஸ் கிட், ஸ்மார்ட் வாட்ச், ஸ்போர்ட்ஸ் சயின்ஸ் கிட்: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்

சென்னை: சென்னை, கலைவாணர் அரங்கில் நேற்று நடந்த விழாவில் விளையாட்டு வீரர்களின் தினசரி பயிற்சி தேவைகள், மறுசீராக்கம் மற்றும் முழுமையான உடல் நலத்தை மேம்படுத்தும் வகையில் விளையாட்டு விடுதிகளில் தங்கி பயிற்சி பெற்றுவரும் 2,600 மாணவ, மாணவிகளுக்கு சாம்பியன்ஸ் கிட் மொத்தம் ரூ.71.15 லட்சம் மதிப்பீட்டில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார். மேலும், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் கடந்த ஆண்டு மாநிலம் முழுவதும் உள்ள தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் விளையாட்டு விடுதிகளில் பயிலும் 2,600 மாணவ, மாணவிகளுக்கு ஸ்மார்ட் வாட்ச் வழங்கப்பட்டது.

இந்த ஸ்மார்ட் வாட்ச் மூலம் பயிற்சியின் அளவுகள், மறுசீராக்க நிலை மற்றும் தினசரி செயல்பாடுகளை கண்காணிக்கும் வகையில் இருக்கும் காரணத்தினால், இந்தாண்டு புதிதாக விளையாட்டு விடுதியில் சேர்க்கப்பட்ட 950 மாணவ, மாணவிகளுக்கு ரூ.20.10 லட்சம் மதிப்பீட்டில் துணை முதல்வர் வழங்கினார். அதேபோன்று, தமிழ்நாட்டில் உள்ள விளையாட்டு விடுதிகளில் தங்கி பயிற்சிபெறும் மாணவ, மாணவிகள் தினசரி கடுமையான பயிற்சிகள், போட்டிகள் மற்றும் குறைந்த மறுசீராக்க நேரம் போன்ற சூழ்நிலைகளை எதிர்கொள்கின்றனர்.

இதற்கென மாநிலம் முழுவதும் செயல்பட்டுவரும் 41 விளையாட்டு விடுதிகளில் அடிப்படை நிலை முதல் உயர் நிலை வரை உள்ள விளையாட்டு வீரர், வீரங்கனைகளுக்கு சரியான மறுசீராக்கம் மற்றும் காயம் ஏற்படும் அபாயத்தை குறைத்திடும் நோக்கத்தை கருத்தில் கொண்டு, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் ரூ.39.59 லட்சம் செலவில், 41 விளையாட்டு விடுதியில் பயிற்சிபெறும் 2600 மாணவ, மாணவிகளுக்கு ஸ்போர்ட்ஸ் சயின்ஸ் உபகரணங்களையும் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்.

இதை தொடர்ந்து தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் தனது டிஜிட்டல் விளையாட்டு நிர்வாக அமைப்பை வலுப்படுத்தும் வகையில் பயிற்சியாளர்களுக்கு 210 கைக்கணினி மற்றும் மாநிலம் முழுவதும் செயல்பட்டுவரும் அனைத்து விளையாட்டு விடுதிகளுக்கும் ரூ.65.65 லட்சம் மதிப்பீட்டில் All-in-One கணினிகள் வழங்கப்பட்டது. இதன் மூலம், Athlete Management System மேலாண்மை செயலியை பயன்படுத்தி விளையாட்டு வீரர், வீராங்கனைகளின் தினசரி செயல்பாடு, பயிற்சி மேலாண்மை மற்றும் உடல் ஆரோக்கியத்தை எளிதாக கண்காணிக்க பயன்படுகிறது. இந்த திட்டத்தின் ஒரு பகுதியாக, ஏஎம்எஸ் பயன்பாடு குறித்து பயிற்சியாளர்கள், விளையாட்டு விடுதி மேலாளர்கள், மாவட்ட விளையாட்டு இளைஞர் நலன் அலுவலர்கள் மற்றும் மண்டல முதுநிலை மேலாளர்களக்கான ஒரு நாள் வழிகாட்டி பயிற்சி நேற்று சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடந்தது.

Related Stories: