ஆர்.என்.ரவி மீது நிலமோசடி புகார் விழுப்புரம் எஸ்பி அலுவலகத்தில் சமூக ஆர்வலர்கள் மீண்டும் மனு: 150 ஏக்கர் அதிமுக பிரமுகருக்கு தாரைவார்ப்பு?

 

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் ஆரோவில் சர்வதேச நகரத்தில் பல்வேறு நாடுகள், மாநிலங்களைச் சேர்ந்த சுற்றுலா பயணிகள் வந்து செல்வது மட்டுமின்றி வசித்தும் வருகின்றனர். இங்கு நிலம் பரிவர்த்தனை என்ற பெயரில் பல கோடி மதிப்பிலான நிலங்களை குறைந்த விலைக்கு விற்பனை செய்து ரூ.350 கோடி வரை வருவாய் இழப்பு ஏற்படுத்தி ஊழல் செய்ததாக ஆரோவில் பவுண்டேஷன் சேர்மன் பதவி வகித்து வரும் கவர்னர் ஆர்.என்.ரவி மற்றும் செயலாளர் பதவியில் உள்ள பெண் ஐஏஎஸ் அதிகாரி ஜெயந்தி மீது கடந்த 5ம்தேதி விழுப்புரம் எஸ்பி அலுவலகத்தில் 3 புகார் மனுக்கள் அளிக்கப்பட்டது. ஆரோவில் பகுதியை சேர்ந்த ஓய்வுபெற்ற ராணுவ மேஜர் அருண்அம்பதி, பிரபு, பாலமுருகன் ஆகியோர் அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்களுடன் வந்து அளித்த தனித்தனி மனுக்களில் பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகளை கூறியிருந்தனர்.

ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டில் நிர்வாகம் இருப்பினும் அங்குள்ள நிலம், சட்டம் ஒழுங்கு பிரச்னை அனைத்தையும் மாநில அரசே கவனித்து வருவதால் இவ்விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியது. ஒட்டுமொத்தமாக ஆர்.என் ரவி, ஜெயந்தி ரவி இருவரும் ஆர்.எஸ்.எஸ் சொல்லி செய்கிறார்களா? பாஜ சொல்லி செய்கிறார்களா? என்று தெரியவில்லை என்ற கேள்வியை சமூக ஆர்வலரான பியூஷ்மானுஷ் எழுப்பியிருந்தார். மேலும் தற்போது 16 ஏக்கர் நிலம் விற்பனையில் அதிமுகவை சேர்ந்த ஒருவருக்கு 10 ஏக்கரும், மற்றொருவருக்கு 3.5 ஏக்கரும், இன்னொருவருக்கு 2.5 ஏக்கரும் விற்பனை செய்துள்ளனர். இதற்கு பதிலாக அவர்கள் குறைந்த மதிப்புள்ள நிலத்தை கொடுத்துள்ளனர். ஒருவர் 30 சென்ட், அதில் கட்டுமானம் உள்ளதாக மதிப்பீடு காட்டி கொடுத்துள்ளனர்.

ஆனால் இவர்கள் பெற்றுள்ளது பலகோடி மதிப்புள்ள நிலம் என்ற குற்றச்சாட்டை எழுப்பிய புகார்தாரர்கள் இவ்விவகாரத்தில் விரைந்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி இருந்தனர். இந்த நிலையில் ஆரோவில் பவுண்டேஷன் மீது மீண்டும் விழுப்புரம் எஸ்பி அலுவலகத்தில் இன்று மற்றொரு புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது. அதில், ஆரோவில் பவுண்டேஷனுக்கு சொந்தமான 150 ஏக்கர் இடத்தை அதிமுக பிரமுகருக்கு குறைந்த விலைக்கு விற்க முயற்சிப்பதாகவும், அதை தடுத்து நிறுத்தகோரியும் ஏற்கனவே அளித்த புகார் மீது உடனே நடவடிக்கை எடுக்க வேண்டுமென சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

 

Related Stories: