வாடிப்பட்டி, பிப். 27: வாடிப்பட்டி அருகே தன்னிடம் இருந்து மனைவி பிரிந்து சென்ற ஏக்கத்தில் இருந்த வாலிபர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். வாடிப்பட்டி அருகே போடிநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் ஜெயராம். இவரது மகன் மனோஜ் (28). இவர் கடந்த சில ஆண்டுகளாக தாதம்பட்டியைச் சேர்ந்த ஒரு இளம்பெண்ணை காதலித்து வந்துள்ளார். பின்னர் கடந்த ஓராண்டிற்கு முன்பாக அந்த பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக, இளம்பெண் மனோஜிடம் இருந்து பிரிந்து சென்றார்.
இவர்கள் இடையிலோன விவாகரத்து வழக்கு மதுரை மாவட்ட குடும்ப நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்நிலையில் மனைவியை பிரிந்த ஏக்கத்தில் இருந்த மனோஜ், நேற்று தனது வீட்டில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்து சம்பவம் இடம் சென்ற வாடிப்பட்டி போலீசார், அவரது உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வாடிப்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த தற்கொலை குறித்து வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
