வாலிபர் சரமாரி வெட்டிக்கொலை: வயல்வெளியில் சடலம் மீட்பு

ஊத்துக்கோட்டை: பெரியபாளையம் அருகே வாலிபர் சரமாரியாக வெட்டிக்கொல்லப்பட்டுள்ளார். முன்விரோதம் காரணமாக இந்த கொலை நடந்ததா என்று போலீசார் விசாரிக்கின்றனர். திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அருகே உள்ள தண்டுமாநகர் வயல்வெளி பகுதியில் இன்று அதிகாலை பொதுமக்கள் சிலர் சென்றுள்ளனர். அப்போது வயல்வெளி ஓரமாக தலை மற்றும் உடல் முழுவதும் பலத்த வெட்டு காயங்களுடன் வாலிபர் சடலம் கிடந்ததால் கடும் அதிர்ச்சி அடைந்தனர். இதுபற்றி தகவல் அறிந்ததும் அந்த பகுதியில் பொதுமக்கள் திரண்டதால் பரபரப்பு நிலவியது.

இதுபற்றி தகவல் கிடைத்ததும் ஊத்துக்கோட்டை போலீஸ் டிஎஸ்பி ராஜா, பெரியபாளையம் காவல்நிலைய இன்ஸ்பெக்டர் குணசேகரன் ஆகியோர் தலைமையில் போலீசார் விரைந்து சென்றனர். இதன் பின்னர் அங்கு கிடந்த வாலிபர் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும் சடலம் அருகே கிடந்த ஒரு கத்தி மற்றும் காலி மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

இதுபற்றி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்தனர். இதில் வெட்டிக்கொல்லப்பட்டவர் பெரியபாளையம் அருகே உள்ள அரியபாக்கம் கிராமத்தை சேர்ந்த கோகுல் (26) என்று தெரியவந்துள்ளது. இவர் மீது கொலை வழக்கு உள்ளது. மேலும் வழக்கு சம்பந்தமாக சிறைக்கு சென்று வந்துள்ளார். வேலை எதுவும் செய்யாமல் ஊர் சுற்றிவந்ததாக தெரிகிறது. எனவே, மது போதையில் நண்பர்கள் இடையே ஏற்பட்ட சண்டையில் வெட்டிக் கொல்லப்பட்டாரா, முன்விரோதம் காரணமாக பழிதீர்க்கப்பட்டாரா என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: