விழுப்புரம், பிப். 19: விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே ரோஷனைபாட்டையைச் சேர்ந்த சபரீஸ்வரன் மனைவி தேவி(21). இவர் நேற்று எஸ்பி அலுவலகத்தில் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:
கடந்த 16ம் தேதி மாலை எங்கள் ஊரில் நடந்த மயான கொள்ளை திருவிழா பார்க்க எனது ஒன்றை வயது பெண் குழந்தையுடன் திண்டிவனம் தீர்த்தகுளம் பகுதியில் நடந்து சென்ற போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த பிரம்மதேசம் காவலர் ஒருவர் என்னை வழிமறித்து என்னை பெண் என்றும் பாராமல் எனது வலது கன்னத்தில் அறைந்து அவர் வைத்திருந்த லத்தியால் என் உடல் முழுவதும் கடுமையாக தாக்கினார். அதில் எனக்கு இடது தொடை, நெற்றி, இடது கால் முட்டி ஆகிய பகுதிகளில் பலத்த காயம் ஏற்பட்டு நான் குழந்தையுடன் கீழே விழுந்து விட்டேன். உனக்கு என்ன இந்த இடத்தில் வேலை என கூறியும் ஒழுங்கா இந்த இடத்தை விட்டு ஓடி விடு இல்லையெனில் இந்த லத்தியால் அடித்து கொன்று விடுவேன் என்று மிரட்டினார். இதை பார்த்து அங்கு இருந்த பொதுமக்கள் என்னை தாக்கிய காவலரிடம் இருந்து என்னை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். நான் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றேன். சம்பந்தப்பட்ட போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.
