சேலம், பிப். 16: சேலத்தில் கட்டிட தொழிலாளியை கத்தியால் வெட்டிய அண்ணனை போலீசார் கைது செய்தனர். சேலம் சூரமங்கலம் சோளம்பள்ளம் காந்திநகர் பகுதியைச் சேர்ந்தவர் கார்த்திக் (23), கட்டிட தொழிலாளி. இவரது அண்ணன் மணிகண்டன் (33). செப்டிக் டேங்க் லாரி கிளீனரான இவர், அய்யம்பெருமாம்பட்டியில் மனைவியுடன் வசித்து வருகிறார்.
நேற்று காலை, சோளம்பள்ளம் அருகே உள்ள மளிகை கடை ஒன்றில் கார்த்திக் நின்று கொண்டிருந்தார். அப்போது டூவீலரில் அங்கு வந்த மணிகண்டன் கார்த்திக்கை பார்த்து, ‘ஏன் என் மனைவியை திட்டினாய்’ என கேட்டுள்ளார். அதற்கு கார்த்திக் பதில் கூறவே, இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறியது. இதில் கோபம் அடைந்த கார்த்திக், அருகில் இருந்த கல்லை எடுத்து மணிகண்டனின் தலையில் ஓங்கி அடித்துள்ளார்.
இதில் காயம் ஏற்பட்டு ரத்தம் ெகாட்டிய நிலையில், ஆவேசமடைந்த மணிகண்டன், டூவீலரில் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து கார்த்திக்கின் தோள்பட்டையில் வெட்டினார். இதில் படுகாயம் அடைந்த கார்த்திக் சுருண்டு விழுந்தார். அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு, சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இதுகுறித்த புகாரின் பேரில், சூரமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, மணிகண்டனை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
