சத்தியமங்கலம்: தாளவாடி மலைப்பகுதியில் இன்று அதிகாலை விவசாய தோட்டத்தில் புகுந்த 3 காட்டு யானைகளை சைரன் ஒலி எழுப்பி வனத்துறையினர் வனத்துக்குள் விரட்டியடித்தனர். ஈரோடு மாவட்டம் தாளவாடி மலைப்பகுதியில் காட்டு யானைகள் இரவு நேரங்களில் ஊருக்குள் புகுந்து விவசாய தோட்டங்களில் பயிரிட்டுள்ள பயிர்களை சேதப்படுத்தும் நிகழ்வு அதிகரித்துள்ளது. வனத்துறை சார்பில் இரவு நேரத்தில் யானைகளை விரட்டும் குழு அமைக்கப்பட்டு யானை வரும் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்று காட்டு யானைகளை விரட்டும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இன்று அதிகாலை தாளவாடி மலைப்பகுதியில் உள்ள அருளவாடி மற்றும் தமிழ்புரம் கிராமங்களில் நுழைந்த 3 காட்டு யானைகளை வனத்துறையினர் சைரன் ஒலி எழுப்பிய விரட்டும் பணியில் ஈடுபட்டனர். வனத்துறையினருடன் இணைந்து விவசாயிகளும் யானைகளை விரட்டி அடித்தனர். சைரன் ஒலியை கேட்ட காட்டு யானைகள் அஞ்சியபடி வனப்பகுதிக்குள் ஓடின. இரவு நேரத்தில் காட்டு யானைகள் ஊருக்குள் நுழைவதால் பொதுமக்கள் மிகவும் எச்சரிக்கையுடன் இருக்குமாறு வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.
