போலி ‘சாட்டிங்’ வழக்கில் திருப்பம்; திரிணாமுல் எம்பி வழக்கில் குற்றவாளியை தப்பவிட்ட உ.பி போலீஸ்: மேற்குவங்க போலீசார் கடும் அதிருப்தி

 

நொய்டா: எம்பி மஹுவா மொய்த்ரா தொடர்பான போலி உரையாடல் வழக்கில் முக்கிய குற்றவாளி தப்பியதால் இரு மாநில போலீசார் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் மஹுவா மொய்த்ரா மற்றும் தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் ஆகியோருக்கு இடையே நடந்தது போன்ற சில உரையாடல்கள் சமூக வலைதளங்களில் வைரலாகின. இது தொடர்பாக மஹுவா மொய்த்ரா அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தினர். தடயவியல் சோதனையில் அந்த உரையாடல்கள் அனைத்தும் போலி என்பது உறுதி செய்யப்பட்டது. இந்த சதி செயலில் பாஜக ஆதரவு அமைப்புடன் தொடர்புடைய சுர்ஜித் தாஸ்குப்தா என்பவருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது. அவரை பிடிக்க நதியா மாவட்ட நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்த நிலையில், சுர்ஜித் தலைமறைவாக இருந்தார்.

இந்நிலையில், நேற்று உத்தரபிரதேச மாநிலம் நொய்டாவில் பதுங்கியிருந்த சுர்ஜித்தை மேற்கு வங்க மாநில கிருஷ்ணாநகர் போலீசார் சுற்றி வளைத்து பிடித்தனர். அப்போது அங்கு வந்த 15 நொய்டா போலீசார், பெங்கால் போலீசாரை வலுக்கட்டாயமாக காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று சுமார் 90 நிமிடங்கள் அடைத்து வைத்தனர். இந்த குளறுபடியால் ஏற்பட்ட காலதாமதத்தை பயன்படுத்தி குற்றவாளி சுர்ஜித் தாஸ்குப்தா அங்கிருந்து தப்பியோடினார். இதுகுறித்து கிருஷ்ணாநகர் மாவட்ட கண்காணிப்பாளர் கே. அமர்நாத் கூறுகையில், ‘உள்ளூர் போலீசார் ஏற்படுத்திய தடையால் விசாரணைக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது, இருப்பினும் தப்பிய குற்றவாளியை பிடிக்க மீண்டும் தீவிர தேடுதல் வேட்டை நடந்து வருகிறது’ எனத் தெரிவித்தார்.

Related Stories: