நச்சாந்துபட்டி பகுதியில் ‘பசுமை திருமயம் பசுமை தமிழ்நாடு’ விழிப்புணர்வு

*பொதுமக்களுக்கு துணிப்பை வழங்கல்

திருமயம் : திருமயம் பகுதியில் பொதுமக்கள் இடையே துணிப்பை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பசுமை திருமயம் பசுமை தமிழ்நாடு என்ற முழக்கத்துடன் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

திருமயம் பகுதியில் இயற்கை வளங்கள் துறை அமைச்சர் ரகுபதி அறிவுறுத்தலின்படி பசுமை திருமயம் என்ற முழக்கத்துடன் பொதுமக்களுக்கு மஞ்சள் துணிப்பை வழங்கப்பட்டது.
நாடு முழுவதும் நாளுக்கு நாள் சுற்றுச்சூழல் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகிறது.

தொழிற்சாலைகள் மூலம் வெளியேற்றப்படும் கழிவுகள் ஒருபுறம் இருக்க பொதுமக்கள் அன்றாட பயன்படுத்தப்படும் சிறுசிறு கழிவுகளும் ஆங்காங்கே தேங்குவதால் தொழிற்சாலை இல்லாத கிராமங்களில் கூட தற்போது சுற்றுச்சூழல் கேள்விக்குறியாக உள்ளது.

இதனை தடுக்க அரசு பல்வேறு அறிவிப்புகள் வெளியிட்டு பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த கூட்டங்கள் பேரணிகள் என நடத்தி பொது மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தி வந்தாலும் அனைவரும் நாம் வாழும் சுற்றுச்சூழலை பாதுகாக்க முயற்சி செய்கிறோமா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.

அதேசமயம் அரசு சுற்றுச்சூழலை பாதுகாக்க ஒரு சில நேரங்களில் கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டாலும் அதனை மக்கள் நீர்த்துப்போக செய்கின்றனர்.

உதாரணமாக பிளாஸ்டிக் பை பயன்படுத்த அரசு தடை விதித்த போதிலும் அதனை மக்களும், வியாபாரிகளும் பின்பற்றுவதாக தெரியவில்லை. இந்த விஷயத்தில் மக்கள் மீது வியாபாரிகளும் வியாபாரிகள் மீது மக்களும் மாறி மாறி குறை சொல்கின்றன.

எதுவாயினும் ஒவ்வொரு தனி மனிதனின் முயற்சியே அரசின் அனைத்து அறிவிப்புகளும் வெற்றியை நோக்கி இழுத்துச் செல்லும் என்பதே நிதர்சனமான உண்மையாகும். இதன் அடிப்படையில் திருமயம் பகுதியில் பொதுமக்கள் இடையே துணிப்பை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இயற்கை வளங்கள் துறை அமைச்சர் ரகுபதி வழிகாட்டுதலின்படி பசுமை திருமயம் பசுமை தமிழ்நாடு என்ற முழக்கத்துடன் திருமயம் அருகே உள்ள நச்சாந்துபட்டி பகுதி கிராம மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

பின்னர் பிளாஸ்டிக் பை பயன்படுத்துவதால் ஏற்படும் விளைவுகள் குறித்து பொதுமக்களிடம் எடுத்து கூறி நற்சான்றுபட்டி சந்தை வியாபாரிகள், பொதுமக்களுக்கு துணிப்பை இலவசமாக வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட மருத்துவ அணி இணைச் செயலாளர் அண்ணாமலை செய்திருந்தார்.

Related Stories: