பொள்ளாச்சி மார்க்கெட்டுக்கு தினமும் 50 டன் தர்பூசணி வரத்து

*மொத்த விலை சரிகிறது

பொள்ளாச்சி : பொள்ளாச்சி மார்க்கெட்டுக்கு தினமும் 50 டன் தர்பூசணி வரத்தால் மொத்த விலை சரிவதாக வியாபாரிகள் தெரிவித்தனர். பொள்ளாச்சி காந்தி மார்க்கெட்டில் உள்ள மொத்த வியாபார கடைகளுக்கு மட்டுமின்றி, சில்லரை விற்பனை கடைகளுக்கும் ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி மாதம் துவக்கத்திலிருந்து விற்பனைக்காக தர்பூசணி கொண்டு வரப்படுகிறது. இந்த ஆண்டில், கடந்த ஜனவரி மாதம் இறுதியிலிருந்து வெளி மாவட்டங்களில் இருந்து தர்பூசணி வரத்து ஆரம்பித்தது.

கடந்த ஆண்டில் அடுத்தடுத்து பெய்த பருவமழையால் விளைச்சல் அதிகரித்துள்ளது. இதனால், திண்டிவனம் உள்ளிட்ட பகுதியிலிருந்து பொள்ளாச்சி மார்க்கெட்டுக்கு தர்பூசணி வரத்து அதிகமானது. இரண்டு வாரத்துக்கு முன்பு ஒரு கிலோ தர்பூசணி மொத்த விலைக்கு ரூ.25 ஆக இருந்தது.

ஆனால் வெயிலின் தாக்கம் அதிகரிப்பால் கடந்த ஒரு வாரமாக பொள்ளாச்சி மார்க்கெட்டுக்கு கொண்டு வரப்பட்ட தர்பூசணி வரத்து நாளுக்கு நாள் அதிகமானது. கடந்த வாரத்தில் நாள் ஒன்றுக்கு 20 டன் தர்பூசணியே விற்பனைக்காக கொண்டு வரப்பட்டன. ஆனால், இந்த வாரத்தில் கடந்த சில நாட்களாக நாள் ஒன்றுக்கு 50 டன் வரையிலும் பொள்ளாச்சி மார்க்கெட்டுக்கு விற்பனைக்காக கொண்டுவரப்படுகிறது.

இதனால் ஒரு கிலோ மொத்த விலைக்கு 20ஆக சரிந்துள்ளது. காந்தி மார்க்கெட்டுக்கு கொண்டு வரப்படும் தர்பூசணிகளை பொள்ளாச்சி மற்றும் வால்பாறை வியாபாரிகளே விற்பனைக்காக வாங்கி செல்கின்றனர். கடந்த ஆண்டில் பிப்ரவரி மாதம் துவக்கத்தில் நாள் ஒன்றுக்கு சராசரியாக 35 டன் அளவிலான தர்பூசணிகளே வரத்து இருந்தது. ஆனால் அதன் வரத்து அதிகரித்துள்ளது. வரும் நாட்களில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்து தர்பூசணி வரத்து மேலும் அதிகமாக இருக்கும் என வியாபாரிகள் தெரிவித்தனர்.

Related Stories: