*10 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்
சிதம்பரம் : கடலூர் மாவட்டம் சிதம்பரம் பகுதியில் இருந்து இருந்து விழுப்புரம் மற்றும் நாகை செல்லும் புறவழி சாலை உள்ளது. இதில் லால்புரம் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதி வழியாக செல்லும் சாலையில் நேற்று அதிகாலையில் காரைக்காலில் இருந்து புதுச்சேரி சென்ற காரும், சென்னையில் இருந்து சிதம்பரம் நோக்கி வந்த காரும் கடும் பனிப்பொழிவு காரணமாக நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.
இதில் இரண்டு கார்களிலும் பயணம் செய்த 10 பேர் லேசான காயத்துடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். காயமடைந்த நபர்கள் அண்ணாமலை நகர் பகுதியில் உள்ள மாவட்ட அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று சென்றனர். இதுகுறித்து தகவல் அறிந்த சிதம்பரம் தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விபத்தில் சிக்கிய இரண்டு கார்களையும் மீட்டு போக்குவரத்தை சரி செய்தனர். மேலும் விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் அதிக பனிப்பொழிவு காரணமாக காரைக்காலில் இருந்து சென்ற கார், வழி தவறி எதிர் திசையில் சென்றதால் இந்த விபத்து ஏற்பட்டிருக்கும் என போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர். மேலும் இந்த பகுதியில் வாகனங்கள் அதி வேகமாக செல்வதால் விபத்துக்களை தடுக்க வேகத்தடை அமைக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
