வெயிலின் தாக்கம் அதிகரிப்பு ஆழியார் வரும் வெளியூர் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை உயர்வு

*தடுப்பணையில் குளிப்பதை தடுக்க கோரிக்கை

பொள்ளாச்சி : பொள்ளாச்சியை அடுத்த ஆழியார் அணை பகுதியில் நேற்று வெயிலையும் பொருட்படுத்தாமல் வெளியூர் சுற்றுலா பயணிகள் அதிகம் வந்திருந்தனர். அவர்களில் பலர் தடையை மீறி தடுப்பணையில் குளித்து சென்றனர்.

பொள்ளாச்சியை அடுத்த ஆழியார் அணை, பூங்கா ஆகியவற்றிற்கு தினமும் உள்ளூர் மற்றும் வெளியூர், வெளி மாவட்டங்களில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.

விடுமுறை நாட்களில் கூட்டம் அதிகளவில் இருக்கும். இதில் கடந்த ஜனவரி மாதம் துவக்கத்தில் ஆங்கில புத்தாண்டு, அதன் பின் பொங்கல் பண்டிகை தொடர் விடுமுறையும், அதனை தொடர்ந்து குடியரசு தின விழாவையொட்டி தொடர் விடுமுறை நாட்களின்போதும் ஆழியாருக்கு சுற்றுலா பயணிகள் அதிகம் வந்த வண்ணம் இருந்தனர்.

அதிலும், ஆழியார் அணைக்கு பொள்ளாச்சி சுற்று வட்டார பகுதிகளில் இருந்தும் திருப்பூர், ஈரோடு, சேலம், திண்டுக்கல், மதுரை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வழக்கத்தை விட அதிகளவில் வந்திருந்தனர். அந்நேரத்தில் வெயிலின் தாக்கம் சற்று குறைந்து ரம்மியமான சூழல் இருந்தது. நாள் ஒன்றுக்கு சுமார் 3500க்கும் மேற்பட்டோர் வந்துள்ளனர்.

அதன்பின் இந்த மாதம் துவக்கத்திலிருந்து வெயிலின் தாக்கம் அதிகரிப்பால் சுற்றுலா பயணிகள் வருகை சற்று குறைந்தது. இருப்பினும், விடுமுறை நாட்களில் வெளியூர் சுற்றுலா பயணிகள் வருகை அதிகம் வந்து செல்கின்றனர்.

இதில் நேற்று முன்தினம் மற்றும் நேற்று விடுறை நாளையொட்டி பிற நாட்களை விட வெளியூர் சுற்றுலா பயணிகள் வருகை அதிகமாக இருந்தது. இங்கு வந்த சுற்றுலா பயணிகள் பலர் தங்கள் குடும்பத்துடன் ஆழியார் அணைப்பகுதி மற்றும் பூங்காவில் வெகுநேரம் பொழுதை கழித்து சென்றனர்.

தற்போது ஆழியார் அணையிலிருந்து வினாடிக்கு 650 கன அடிவீதம் தண்ணீர் திறப்பு உள்ளது. இந்த தண்ணீர், ஆழியாற்று அணை வழியாக புதிய மற்றும் பழைய ஆயக்கட்டு பாசனத்துக்கும் கேரளாவுக்கும் செல்கிறது. அதிலும், தடுப்பணையில் மறுகால் வழியாக பாய்ந்து செல்கிறது. ஆனால், இந்த தடுப்பணைகளில் சுற்றுலா பயணிகள் தடையை மீறி குளித்து செல்வதை தொடர்ந்துள்ளனர்.

நேற்று விடுமுறை நாளையொட்டி ஆழியாருக்கு வந்த சுற்றுலா பயணிகள் பலரும், அருகே உள்ள ஆழியாற்று தடுப்பணையில் குளித்து சென்றனர். அங்கு குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது என தெரிந்தும், போலீசார் மற்றும் பொதுப்பணித்துறையினர் கண்காணிப்பு இல்லாததால் சுற்றுலா பயணிகள் குளித்து சென்றனர். எனவே, தடுப்பணையில் உயிர் பலி, விபரீத சம்பவம் நடப்பதற்குள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தன்னார்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: