வால்பாறை எஸ்டேட் பகுதிகளில் தண்ணீர் தொட்டிகள், கிணறுகளுக்கு பாதுகாப்பு மூடி அவசியம்

*குட்டைகளில் வேலி அமைக்கவும் வனத்துறை வலியுறுத்தல்

வால்பாறை : வால்பாறை எஸ்டேட் பகுதிகளில் தரைமட்ட தண்ணீர் தொட்டிகள் மற்றும் திறந்த நிலையில் உள்ள கிணறுகள் வனவிலங்குகளுக்கு ஆபத்தாக மாறக்கூடும் என்பதால் அவற்றுக்கு திடமான பாதுகாப்பு மூடியை அமைக்க வேண்டும் என வனச்சரகர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

வால்பாறை மற்றும் சுற்று வட்டார தேயிலை, காபி தோட்ட பகுதிகளில் யானைகள்,காட்டு மாடுகள், மான் உள்ளிட்ட வன விலங்குகள் அடிக்கடி குடியிருப்பு பகுதிகளுக்கு அருகே வருவது வழக்கமாக உள்ளது.குறிப்பாக தண்ணீர் தேடி வரும் விலங்குகள் திறந்த நிலையில் உள்ள கிணறுகள் மற்றும் தரைமட்ட தண்ணீர் தொட்டிகளில் தவறி விழும் அபாயம் அதிகரித்து வருவதாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதனால், எஸ்டேட் நிர்வாகங்கள் மற்றும் தொழிலாளர் குடியிருப்புகளில் உள்ளவர்கள் தண்ணீர் தொட்டிகள் மற்றும் கிணறுகளுக்கு இரும்பு அல்லது கான்கிரீட் மூடியை அமைக்க வேண்டும் என்றும்,குளம் உள்ளிட்ட பகுதிகளில் வேலி அமைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், இரவு நேரங்களில் வெளிச்சம் வசதி ஏற்படுத்துதல், குடியிருப்பு பகுதிகளுக்கு அருகே புதர்களை அகற்றுதல் போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அவசியம் என வலியுறுத்தி உள்ளனர். வன விலங்குகள் மற்றும் மனிதர்கள் இடையே ஏற்படும் உயிரிழப்புகளை தவிர்க்க அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என வனத்துறை சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

Related Stories: