காரைக்காலில் 10 லட்சம் மதிப்பிலான 50 செல்போன்கள் மீட்பு

*பொதுமக்களிடம் ஒப்படைத்த சீனியர் எஸ்பி

காரைக்கால் : காரைக்கால் போக்குவரத்து காவல் நிலையத்தில் சீனியர் எஸ்பி லட்சுமி சவுஜன்யா தலைமையில் பொதுமக்கள் குறைதீர் கூட்டம் நடந்தது. இதில் 20க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு தங்களது புகார் மனுக்களை சீனியர் எஸ்பியிடம் அளித்தனர். இதுதொடர்பாக விசாரணை செய்து நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட காவல் நிலைய அதிகாரிகளுக்கு சீனியர் எஸ்பி அறிவுறுத்தினார்.

இதைத் தொடர்ந்து, கைப்பேசியை தவறவிட்டோருக்கு, அதனை மீட்டு போலீசார் ஒப்படைக்கும் நிகழ்வு நடைபெற்றது. காரைக்கால் மாவட்ட காவல் நிலையங்களில், தங்களது கைப்பேசி காணாமல் போனதாகவும், திருடு போனதாகவும் பல்வேறு புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

கைப்பேசி விவரங்களை சேகரித்து, காரைக்கால் இணைய குற்ற தடுப்பு பிரிவு இன்ஸ்பெக்டர் பிரவீன்குமார் தலைமையிலான போலீசார் சிஇஐஆர் என்கிற செயலியில் பதிவு செய்து, கைப்பேசி பயன்பாட்டில் உள்ள இடங்களை கண்டறிந்து, அங்கு சென்று அவற்றை மீட்டனர். இதன்படி, மீட்கப்பட்ட 10 லட்சம் மதிப்பிலான 50க்கும் மேற்பட்ட செல்போன்களை உரியவர்களிடம் சீனியர் எஸ்பி ஒப்படைத்தார்.

பின்னர், அவர் நிருபர்களிடம் கூறியதாவது: மக்கள் மன்றத்தில் வரதட்சணை, மோசடி உள்ளிட்ட சில புகார்களும், போக்குவரத்து சிக்னல் செயல்பாடுகளை மேம்படுத்த வேண்டும் உள்ளிட்ட ஆலோசனைகள் வந்தன. இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும். மக்கள் மன்றம் வாரந்தோறும் சனிக்கிழமை நடைபெறுகிறது. மக்கள் ஆர்வமாக வந்து புகார்களை அளிக்கிறார்கள். உரிய தீர்வுக்கு நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

இதுபோன்ற முகாமை காரைக்கால் மக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். திருநள்ளாறு கோயிலில் சனிப்பெயர்ச்சி விழா நடைபெறவுள்ளது. இதற்கான பாதுகாப்புக்கான முன்னேற்பாடுகளும் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

பொதுமக்கள் தங்களது கைப்பேசிகளை பத்திரமாக வைத்திருக்க முயற்சிப்பதோடு, காணாமல் போனாலோ, திருடு போனாலோ உடனடியாக காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தால் நடவடிக்கை விரைவுப்படுத்தப்படும் என்றார். அப்போது, தெற்கு மண்டல எஸ்பி சுபம் சுந்தர் கோஷ், இன்ஸ்பெக்டர்கள் சண்முகம், பிரவீன்குமார், மரிய கிறிஸ்டின் பால், மர்த்தினி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

Related Stories: