சாடிவயல் யானைகள் முகாமிற்கு டாப்சிலிப்பில் இருந்து 2 கும்கிகள் வரவழைக்கப்படுகின்றன

கோவை : கோவையில் ரூ.8 கோடி செலவில் புனரமைக்கப்பட்ட சாடிவயல் யானைகள் முகாமிற்கு 2 கும்கி யானைகளை வனத்துறையினர் கொண்டு வர உள்ளனர்.

கோவை மாவட்டம் போளுவாம்பட்டி வனச்சரகத்திற்கு உட்பட்ட சாடிவயலில் உள்ள யானைகள் முகாம் ரூ.8 கோடி செலவில் பல்வேறு நவீன வசதிகளுடன் புனரமைக்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்தது.

இதன்படி 50 ஏக்கர் பரப்பளவில் 18 புதிய யானைகள் ஷெட், 2 கரோல், 2 கிம்.மீ. தொலைவிற்கு சோலார் மின்வேலி, 40 சோலார் விளக்குகள், 3 சிறிய குட்டைகள், 8 யானை பாகன்கள் தங்கும் விடுதிகள், 5 யானைகள் குளிப்பதற்கான ஷவர், தண்ணீர் வசதி, கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் முகாமை சுற்றி அகழி, சோலார் மின்வேலி உள்ளிட்டவை அமைக்கப்பட்டுள்ளன.

இந்த முகாமினை கடந்த டிச.30ம் தேதியன்று கோவைக்கு வருகை தந்த துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் காணொலி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.

கோவை சுற்றுவட்டார பகுதிகளில் ஊருக்குள் நுழையும் காட்டு யானைகள் விரட்டுதல், பிடித்தல் உள்ளிட்ட பணிகளுக்காக இந்த முகாமிற்கு கும்கி யானைகளை கொண்டு வரவும், இதனால் டாப்சிலிப், முதுமலை பகுதிகளில் இருந்து கும்கி யானைகளை வரவழைக்கப்படுவதால் ஏற்படும் காலதாமத்தை தவிர்க்கவும் வனத்துறையினர் திட்டமிட்டனர்.

இதற்காக முதன்மை தலைமை வனப் பாதுகாவலரிடம் கோவை வனத்துறை அதிகாரிகள் அனுமதி கேட்டிருந்தனர். இதன்படி 2 கும்கி யானைகளை டாப்சிலிப் யானைகள் முகாமில் இருந்து சாடிவயல் யானைகள் முகாமிற்கு கொண்டு வர அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து 2 கும்கி யானைகள் சாடிவயல் யானைகள் முகாமிற்கு கொண்டு வருவதற்கான பணிகளில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.இது குறித்து வனத்துறை அதிகாரிகள் கூறியதாவது, ‘‘சாடிவயல் யானைகள் முகாமில் கும்கி யானைகள் பராமரிக்கப்பட்டு வந்ததோடு, கோவை சுற்றுவட்டார பகுதிகளில் கிராமங்களுக்குள் நுழையும் காட்டு யானைகள் விரட்டவும், பிடிக்கவும் பயன்படுத்தப்பட்டு வந்தன.

தற்போது பல்வேறு வசதிகளுடன் புனரமைக்கப்பட்டு யானைகள் முகாம் திறக்கப்பட்டுள்ளது. இங்கு 2 கும்கி யானைகள் கொண்டு வருவதற்கான அனுமதி கிடைத்துள்ளது. விரைவில் 2 கும்கி யானைகள் கொண்டு வரப்படும். இங்கு அவை பராமரிக்கப்படுவதோடு, காட்டு யானைகளை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளிலும் ஈடுபடுத்தப்படும்’’ இவ்வாறு அவர்கள் கூறினர்.

Related Stories: