திருப்பூர் மாவட்டத்தில் உள்ள 8 சட்டமன்ற தொகுதிகளில் வாக்காளர்கள் அதிகமாக உள்ள தொகுதியாக வடக்கு சட்டமன்ற தொகுதி இருந்து வருகிறது. வடக்கு தொகுதியில் பனியன் நிறுவனங்கள் அதிகளவு உள்ளதால் தொழிலாளர்கள் இந்த தொகுதியில் ஆதிக்கம் செலுத்தி வருகிறார்கள். குறிப்பாக, கிராமப்புற பகுதிகள் அதிகம் இந்த தொகுதியில் இருந்து வருகிறது.
இந்த தொகுதியை பொறுத்தவரை கடந்த 2 தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் கே.என்.விஜயகுமார். இவர், கடந்த 2 முறை வெற்றிபெற்ற பின்னரும் இம்முறை அவருக்கு ‘சீட்’ வழங்க வாய்ப்பில்லை என அதிமுக வட்டாரங்கள் தெரிவித்து வருகின்றன. அதற்கு முக்கிய காரணம், அவரது செயல்பாடு மிகவும் மோசமானதாக இருக்கிறதாம். கட்சி வளர்ச்சிக்காக சுறு சுறுப்பாக பணியாற்றுவதில்லையாம், கட்சிக்கு கெட்டப்பெயர் ஏற்படுத்தும் வகையில் செயல்படுகிறார் எனவும் நிர்வாகிகள் பலர் மேலிடத்துக்கு புகார் தொிவித்துள்ளனர்.
அதனால், இந்த வாய்ப்பினை பயன்படுத்தி ‘சீட்’ பெறுவதற்கு மற்றொரு சிட்டிங் எம்எல்ஏ எம்.எஸ்.எம்.ஆனந்தன், முன்னாள் எம்.பி. சிவசாமி ஆகியோர் போட்டி போடுகிறார்களாம். பல்லடம் தொகுதியில் எம்எல்ஏவாக இருந்து வரும் எம்.எஸ்.எம்.ஆனந்தனுக்கும், கரைப்புதூர் நடராஜனுக்கும் ஏற்கனவே பல்வேறு பிரச்னைகள் இருந்து வருகிறது. இதனால், இம்முறை பல்லடம் தொகுதியை அவர் விட்டுக்கொடுக்க மறுத்து வருகிறார். எனவே, திருப்பூர் வடக்கு தொகுதியில் ஏற்கனவே எம்.எஸ்.எம்.ஆனந்தன் எம்.எல்.ஏ.வாக இருந்ததால், அதனை சாதகமாக பயன்படுத்தி அந்த தொகுதியில் ‘சீட்’ பெறுவதற்கு முயற்சி செய்து வருகிறார்.
இதனால் எடப்பாடி பழனிசாமியிடம் நற்பெயர் வாங்குவதற்காக அவர் திருப்பூர் வந்தபோது தடல்.. புடலாக வரவேற்பு ஏற்பாடுகள் செய்து அசத்தியுள்ளார். எப்படியும் ‘சீட்’ கிடைத்து விடும் என்ற எதிர்பார்ப்பில் இருந்து வருகிறார். ஆனால், முன்னாள் எம்.பி.யும், கட்சியின் அமைப்பு செயலாளருமான சிவசாமி வடக்கு தொகுதியில் எம்.எல்.ஏ.வாக இருந்தவர். சீனியரான இவரும் இத்தொகுதிக்கு புதியவர் அல்ல. எனவே, இம்முறை ‘சீட்’ பெற்றுவிட வேண்டும் என அவரும் முனைப்பு காட்டி வருகிறார்.
கட்சியில் சீனியரான அவருக்குத்தான் இம்முறை ‘சீட்’ கிடைக்கும் என அவரது ஆதரவாளர்கள் பேசி வருகிறார்கள். இருப்பினும், சிட்டிங் எம்.எல்.ஏ.வுக்கு ‘சீட்’ இல்லை என்பது அவரது ஆதரவாளர்களை அப்செட் செய்ய வைத்துள்ளது. எம்.எஸ்.எம். ஆனந்தன் வளர்ச்சியில் சிவசாமியின் பங்கு அதிகமாக இருந்தது. இருப்பினும் அவரை எதிர்த்து எம்.எஸ்.எம்.ஆனந்தன் செயல்பட்டு வருவது கட்சி நிர்வாகிகள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.
