காங்கிரஸ் போட்டியிடும் 40 தொகுதிகள் உத்தேச பட்டியல் வெளியானது: கட்சி தலைமை மறுப்பு

சென்னை: காங்கிரஸ் கட்சி போட்டியிடும் தொகுதிகள் எவை என்பது குறித்து தேர்வு செய்யும் வகையில் காங்கிரஸ் குழு கொடுத்த 40 தொகுதிகள் கொண்ட உத்தேச பட்டியல் வெளியானது. இதை அதிகாரப்பூர்வ பட்டியல் அல்ல என்று கட்சி தலைமை மறுத்துள்ளது. தமிழ்நாட்டில் வரும் 30ம்தேதி சட்டமன்ற தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் தொடங்க உள்ளது. இதனால் அனைத்து கட்சிகளும் தொகுதி பங்கீட்டை முடித்து வேட்பாளர்கள் தேர்வில் தீவிரமாக களம் இறங்கியுள்ளன. திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ் கட்சிக்கு 28 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. எந்தெந்த தொகுதிகள் என அடையாளம் காணும் பணி நடந்து வருகிறது. இதற்காக காங்கிரஸ் கட்சி கேடக்கக்கூடிய விருப்ப பட்டியலை திமுக குழுவை சந்தித்து வழங்கியுள்ளது.

இதில் சில தொகுதிகளை திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் கேட்கின்றன. சில தொகுதிகளில் கூட்டணி கட்சிகளிடம் இருந்து காங்கிரஸ் கேட்கிறது. இதனால் இன்னும் காங்கிரஸ் கட்சிக்கான தொகுதிகளை அடையாளம் காணும் பணி முடிவடையவில்லை. திமுக குழுவிடம் காங்கிரஸ் சார்பில் 40 தொகுதிகள் அடங்கிய விருப்ப பட்டியலை வழங்கியதாக கூறப்படுகிறது. இதில் எந்தெந்த தொகுதிகள் இறுதி செய்யப்பட உள்ளது என்ற எதிர்பார்ப்பு காங்கிரசார் மத்தியில் எழுந்துள்ளது. இந்நிலையில், திமுக குழுவில் காங்கிரஸ் குழு வழங்கிய 40 தொகுதிகள் அடங்கிய உத்தேச பட்டியல் என சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது. இது அதிகாரப்பூர்வமான பட்டியல் அல்ல என்று காங்கிரஸ் தலைமையும் மறுத்துள்ளது. ஆனாலும் இதுதான் உத்தேச பட்டியல் என காங்கிரஸ் நிர்வாகிகள் அதை வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பரப்பி வருகின்றனர்.

இந்த பட்டியலில், அமைச்சர் மனோ தங்கராஜின் சிட்டிங் தொகுதியான பத்மநாபபுரம் தொகுதி உள்பட 40 தொகுதிகள் உள்ளதாக கூறப்படுகிறது. இதில், கிள்ளியூர், விளவங்கோடு, ஆலங்குளம், காரைக்குடி, ராமநாதபுரம், நாங்குநேரி, ஊத்தங்கரை, முசிறி, அம்பத்தூர், பொன்னேரி, கடலூர், சிதம்பரம், மொடக்குறிச்சி, திருப்பூர் தெற்கு, மதுராந்தகம், அறந்தாங்கி, மேட்டூர், உதகை, விருத்தாசலம், குளச்சல், பத்மநாபபுரம், விருதுநகர், தென்காசி, திருவாடானை, முதுகுளத்தூர், மணப்பாறை, சோளிங்கர், ஸ்ரீபெரும்பதூர், மயிலாடுதுறை, கும்பகோணம், வேடசந்தூர், மதுரை தெற்கு, கோவை தெற்கு, கலசப்பாக்கம், புதுக்கோட்டை, வேளச்சேரி, சிவகாசி, வேதாரண்யம், ஸ்ரீவைகுண்டம் ஆகிய 40 தொகுதிகள் இடம்பெற்றுள்ளன.

Related Stories: