ஆலப்புழா மாவட்டம் காயங்குளம் தொகுதியில் சிபிஎம் சார்பில் தற்போதைய எம்எல்ஏவான பிரதிபா போட்டியிடுகிறார். ஆலப்புழா மாவட்ட முன்னாள் பஞ்சாயத்து தலைவியான இவர் தொடர்ந்து மூன்றாவது முறையாக காயங்குளம் தொகுதியில் களமிறங்கியுள்ளார். 2016 முதல் இவர் இந்தத் தொகுதியின் எம்எல்ஏவாக உள்ளார். இந்நிலையில் கடந்த இரு தினங்களுக்கு முன் ஆலப்புழாவில் நடந்த காங்கிரஸ் கூட்டணியின் பிரசார பொதுக்கூட்டத்தில் முஸ்லிம் லீக் தலைவரான இர்ஷாத் கலந்து கொண்டு பேசுகையில், ‘‘மக்கள் பிரதிநிதி என்ற நிலையில் காயங்குளம் தொகுதிக்கு பிரதிபா இதுவரை எதுவும் செய்யவில்லை. பேச்சுத் திறமை மற்றும் தன்னுடைய அழகை விற்பனை சரக்காக வைத்து அவர் மீண்டும் தேர்தலில் போட்டியிடுகிறார்’’ என்றார்.
இர்ஷாத்தின் இந்தப் பேச்சுக்கு முதல்வர் பினராயி விஜயன் உள்பட கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர். இது தொடர்பாக சிபிஎம் சார்பில் தேர்தல் ஆணையத்தில் புகார் செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க ஆலப்புழா மாவட்ட கலெக்டரும், தேர்தல் அதிகாரியுமான இன்பசேகருக்கு மாநில தலைமை தேர்தல் அதிகாரி ரத்தன் யு.கேல்கர் உத்தரவிட்டார். இந்நிலையில் பிரதிபா எம்எல்ஏவுக்கு எதிராக அவதூறாக பேசிய முஸ்லிம் லீக் தலைவர் இர்ஷாத்துக்கு எதிராக வழக்கு பதிவு செய்ய போலீசுக்கு கலெக்டர் இன்பசேகர் உத்தரவிட்டார். இதற்கிடையே இர்ஷாத்தை கட்சியிலிருந்து சஸ்பெண்ட் செய்திருப்பதாக முஸ்லிம் லீக் கட்சி அறிவித்துள்ளது.
* சத்தியமா நம்புங்க… சொத்து மதிப்பே 84 ரூபாய்தான்! கையில 40 ரூபாய்தான் இருக்கு! அதிசய பெண் வேட்பாளர்
கேரளாவில் இறுதி வேட்பாளர்கள் பட்டியல் வெளியான நிலையில், பெரும்பாலான வேட்பாளர்களின் சொத்து மதிப்பு பல கோடிகளையும் தாண்டிய நிலையில் ஒரு இளம் பெண் வேட்பாளரின் சொத்து மதிப்பு 100 ரூபாய் கூட இல்லை என்றால் நம்ப முடிகிறதா? கோட்டயம் மாவட்டம் ஏற்றுமானூர் தொகுதியில் எஸ்யுசிஐ (கம்யூனிஸ்ட்) சார்பில் போட்டியிடும் ஆஷ்னா (26) என்ற பெண் வேட்பாளர் தன்னுடைய சொத்து மதிப்பு 84 ரூபாய் என்று குறிப்பிட்டுள்ளார். வேட்பு மனு தாக்கல் செய்த போது இவரிடம் கையில் வெறும் 40 ரூபாய் மட்டுமே இருந்ததாம்.
வங்கிக் கணக்கில் இருந்த பணம் ரூ. 44. இதை இரண்டையும் சேர்த்துத் தான் தனக்கு 84 ரூபாய் மட்டுமே சொத்து மதிப்பு என்று ஆஷ்னா குறிப்பிட்டுள்ளார். தனக்கு சொந்தமாக வாகனமோ, நிலமோ என எந்த சொத்துக்களும் இல்லை என்றும் இவர் தன்னுடைய மனுவில் தெரிவித்துள்ளார். எர்ணாகுளத்தை சேர்ந்த இவர் கல்லூரியில் படிக்கும் போதே அரசியலில் ஈடுபாடு காட்டத் தொடங்கினார். திருவனந்தபுரத்தில் சம்பள உயர்வு கோரி ஆஷா தொழிலாளர்கள் தங்களது கூந்தலை அறுத்து போராட்டம் நடத்தியபோது ஆஷ்னாவும் தன்னுடைய கூந்தலை அறுத்து அவர்களுடைய போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
* எங்க கொடி, சின்னத்த நீங்க யூஸ் பண்ணக் கூடாது: என்டிஏ கூட்டணிக்கு பாமக அதிரடி வார்னிங்
தமிழகத்தில் தேஜ கூட்டணியில் அதிமுக, பாஜ, பாமக (அன்புமணி), அமமுக உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்றுள்ளன. புதுச்சேரியிலும் அதே கூட்டணி தொடரும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் பாமகவை ஆளும்கட்சியான என்.ஆர்.காங்கிரசும், பாஜவும் தொகுதி பங்கீட்டில் அறவே கண்டுகொள்ளவில்லை. பெயரளவில்கூட பாமக மாநில தலைமையை மதித்து, அழைத்துகூட பேசவில்லை. அதேவேளையில் புதிதாக கூட்டணியில் இருந்த லஜகவுக்கு 2 தொகுதிகள் ஒதுக்கப்பட பாமக நிர்வாகிகள் கடும் விரக்தியடைந்தனர். தனித்து போட்டியிடப் போவதாக அறிவித்து 19 தொகுதிகளில் வேட்பு மனு தாக்கல் செய்த நிலையில் அம்மனுக்களும் ஏற்கப்பட்டன.
இந்நிலையில், புதுச்சேரியில் தேஜ கூட்டணியில் போட்டியிடும் வேட்பாளர்கள் தீவிர தேர்தல் பிரசாரத்தை தொடங்கி உள்ளனர். அவர்கள் பயன்படுத்தும் பேனர், நோட்டீஸ்களில் பாமக தலைவர் அன்புமணி பெயர், கட்சி சின்னம், கொடியை பயன்படுத்தினர். இதனால் அதிர்ச்சியடைந்த பாமக, தேஜ அணியின் இந்நடவடிக்கைக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. பாமக யாருக்கு? என்பது குறித்த சிவில் வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில், அதுவரையிலும் தங்களுக்கு லாபம் எனும் வகையில், தேஜ அணி வேட்பாளர்கள் பாமக பெயர், சின்னத்தை தொடர்ந்து பயன்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில் பாமக கிழக்கு மண்டல மாநில அமைப்பாளரான கோபி (எ) கோபாலகிருஷ்ணன் கூறுகையில், ‘தமிழகத்தில் மட்டுமே நாங்கள் தேஜ கூட்டணியில் இருக்கிறோம். புதுச்சேரியில் இல்லை. எனவே, எங்களது தலைவரின் படம், கட்சிக்கொடி ஆகியவற்றை தேஜ கூட்டணி வேட்பாளர்கள் பயன்படுத்தக் கூடாது’ என கொந்தளித்துள்ளார். இவ்விவகாரம் தற்போது புதுச்சேரி அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
* அசாமில் பாஜவுக்கு ஹாட்ரிக் வெற்றியா? சான்ஸே இல்லை: கவுரவ் கோகாய் உற்சாகம்
அசாம் மாநிலத்தில் பா.ஜ ஹாட்ரிக் வெற்றியை நோக்கி நடைபோடும் போது, அதை தடுக்க முன்னாள் முதல்வர் மகன் கவுரவ் கோகாய், புதிய காங்கிரஸ் தலைவராக நியமிக்கப்பட்டதில் இருந்து அசாம் சட்டப்பேரவை தேர்தலில் அனல் பறக்கிறது. இப்போது உள்ள தேர்தல் நிலவரம் குறித்து கவுரவ் கோகாய் கூறியதாவது: அசாம் பா.ஜ அரசு ஹாட்ரிக் வெற்றியை நோக்கி நகர்ந்து கொண்டு இருக்கிறது. ஆனால் அதை வீழ்த்த நாங்கள் 6 கட்சி கூட்டணியுடன் களத்தில் இறங்கியிருக்கிறோம். ஊழல் நிறைந்த முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா தலைமையிலான அரசை வீழ்த்த எங்கள் கூட்டணி கட்சி தொண்டர்கள் தயார்.
இந்த நேரத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர்களை பிரித்து பா.ஜவில் இணைத்து வருகிறார் முதல்வர் ஹிமந்தா. இது காங்கிரஸ் கட்சிக்கு பிரச்சினையாக இருந்து வருகிறது. தற்போதைய முதல்வர் எந்த ஒரு பிளவுபடுத்தும் முயற்சியை பயன்படுத்தினாலும் அதன் நோக்கத்தை மக்கள் அறிவார்கள். ஏனெனில் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா மற்றும் அவரது முன்னாள் காங்கிரஸ் சகாக்களின் ஊழல் மற்றும் முறைகேடுகள்தான் கடந்த காலத்தில் மக்கள் காங்கிரஸ் கட்சியை நிராகரிக்க முக்கிய காரணமாக இருந்தன. முதல்வர் உள்பட அவர்கள் அனைவரும் இப்போது பாஜவில் இணைந்துள்ளனர். அதே நேரத்தில் பாஜவின் மூத்த தலைவர்கள் ஓரங்கட்டப்பட்டுள்ளனர் அல்லது போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது.
எனவே அசாமில் பாஜ ஏற்கனவே வெளியேற்றப்பட்டுவிட்டது என்றும் தற்போது காவி நிறச் சின்னம் கொண்ட சர்மா தலைமையிலான காங்கிரஸ் மட்டுமே எஞ்சியுள்ளது என்றும் ஒரு பொதுவான கூற்று நிலவுகிறது. தற்போதைய அரசு, அரசுப் பள்ளிகளை மூடுவதில் பெயர்போனது. எனவே ஊழலற்ற நிர்வாகத்திற்காகவும், நல்லிணக்கத்தைப் பேணுவதற்காகவும் மக்கள் காங்கிரஸுக்கு வாக்களிக்க வேண்டும். தற்போதைய அரசு பிளவுபடுத்தும் சக்திகளை நம்பியே இயங்குகிறது. சகிப்புத்தன்மையற்ற, வன்முறை நிறைந்த சமூகமாக அசாம் மற்றும் வடகிழக்கு மாநிலங்களைச் சித்தரிப்பதன் மூலம் பாஜ மக்களுக்கு அவமானத்தை மட்டுமே ஏற்படுத்தியுள்ளது. இவ்வாறு தெரிவித்தார்.
* ராம நவமியை பயன்படுத்தி மேற்கு வங்கத்தில் கெத்து காட்ட பாஜ முயற்சி
நாடு முழுவதும் நேற்று ராம நவமி விழா கொண்டாடப்பட்டது. ஆனால் மேற்கு வங்கத்தில் சட்டப்பேரவை தேர்தல் நேரத்தில் வந்த ராம நவமி விழா பா.ஜவின் பலத்தை காட்டும் ஒரு முயற்சியாக நடந்தது. கொல்கத்தா மற்றும் பல்வேறு மாவட்டங்கள் முழுவதும் காவிக்கொடிகள் பட்டொளி வீசிப் பறந்தன. மக்கள் கூட்டம் நிறைந்த தெருக்களில் ஜெய் ராம் முழக்கங்கள் எதிரொலித்தன. நூற்றுக்கணக்கான ஊர்வலங்கள் குடியிருப்புப் பகுதிகள் வழியாக அணிவகுத்துச் சென்றன. மேற்குவங்கத்தில் ஒரு காலத்தில் சிறிய அளவில் கொண்டாடப்பட்டு வந்த இவ்விழா, நேற்று மிகப்பிரமாண்ட விழாவாக பா.ஜ சார்பில் நடத்தப்பட்டது.
கொல்கத்தா நகரில் மட்டும் சிறியதும் பெரியதுமாக 60க்கும் மேற்பட்ட ஊர்வலங்கள் நடத்தப்பட்டன. இதேபோன்ற ஊர்வலங்கள் ஹவுரா, ஹூக்ளி, பீர்பூம் மற்றும் உத்தர தினஜ்பூர் போன்ற மாவட்டங்களிலும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. மேற்குவங்க சட்டப்பேரவை பா.ஜ எதிர்க்கட்சித் தலைவர் சுவேந்து அதிகாரி, முதல்வர் மம்தா போட்டியிடும் பவானிப்பூர் தொகுதியில் நடைபெற்ற ராம நவமி ஊர்வலத்தில் கலந்துகொண்டார். தெற்கு கொல்கத்தாவில் அமைந்துள்ள இந்தத் தொகுதியில்தான்,அவர் முதல்வர் மம்தா பானர்ஜியை எதிர்த்துப் போட்டியிட உள்ளார்.
