பிரதமரை அழைத்து வந்தும் பின்னடைவு: தீப அரசியல் ‘சுட்டதால்’ திருப்பரங்குன்றம் ரிஜக்ட்? மற்ற ‘முருகன்’ தொகுதிகளிலும் போட்டியிடாமல் ‘ஜகா’

திருப்பரங்குன்றம் மலையில் நூற்றாண்டிற்கும் மேல் வழக்கமாக கார்த்திகை தீபம் ஏற்றப்படும் உச்சிப் பிள்ளையார் கோயில் பகுதியில் தீபம் ஏற்றக் கூடாது என்றும், மலை உச்சியில் சிக்கந்தர் தர்கா அருகிலுள்ள எல்லைத்தூணில் தான் தீபம் ஏற்ற வேண்டுமென்பதையும் குறிக்கோளாக கொண்டு இந்துத்துவ அமைப்புகள் பல ஆண்டுகளாகவே செயல்பட்டு வந்தன. இதுதொடர்பான வழக்குகளில் பல ஆண்டுகளாக அவர்களுக்கு சாதகமான தீர்ப்புகள் கிடைக்கவில்லை. ஆனாலும் அசராத இந்து அமைப்புகள் அவ்வப்போது வழக்கு தொடர்வதை மட்டும் நிறுத்தியபாடில்லை.

மதுரையை மையமாக வைத்து மதவாத அரசியலை முன்னெடுக்க நினைத்த பாஜ, வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் கார்த்திகை தீப அரசியலை முன்னெடுத்து வந்தது. மதுரையில் முருக பக்தர்கள் மாநாட்டையும் நடத்தியது. திருப்பரங்குன்றம் விவகாரத்தில் இந்து தமிழர் கட்சியின் நிறுவன தலைவர் ராம.ரவிக்குமார் தொடர்ந்த வழக்கில், மனுதாரர் குறிப்பிடும் இடத்தில் தான் தீபம் ஏற்ற வேண்டுமென தனி நீதிபதி உத்தரவிட்டார். இந்த உத்தரவை நிறைவேற்றக் கோரிய நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், டிச. 3ம் தேதி மனுதாரர் சிஐஎஸ்எப் பாதுகாப்புடன் சென்று தீபம் ஏற்ற வேண்டுமென நீதிமன்றம் உத்தரவிட்டது.

அன்றைய தினம் கோயில் தரப்பில் வழக்கம் போல தீபம் ஏற்றப்பட்டது. இதனால், திருப்பரங்குன்றம் பகுதியில் பதற்றமான சூழல் ஏற்பட்டது. தனி நீதிபதியின் உத்தரவை வைத்து பாஜ, இந்து முன்னணி உள்ளிட்ட மதவாத இந்து அமைப்புகள் கலவரத்தில் ஈடுபட முயன்றனர். போலீசார் தாக்கப்பட்டனர். பேரிகார்டு உள்ளிட்ட தடுப்புகள் மற்றும் பொதுச் சொத்துக்கள் இந்து அமைப்பினரால் சேதப்படுத்தப்பட்டன. இந்தப் பகுதி முழுவதும் கலவர பூமி போல காட்சியளித்தது. பாஜ மற்றும் இந்து அமைப்பினரின் இந்த முயற்சி தேவையற்ற சட்டம், ஒழுங்கு பிரச்னையை ஏற்படுத்தும் என்பதால், இந்த விவகாரம் முன்வைத்து மாநிலம் தழுவிய பிரச்னையாக முன்னெடுக்கலாம் என பாஜ நினைத்தது.

சட்டமன்ற தேர்தலுக்கு முன்பாக மதரீதியான பிரச்னையை முன்னெடுத்தால், அது தேர்தலில் தங்களுக்கு சாதகமாக இருக்கும் என நினைத்து பாஜ திருப்பரங்குன்றம் விவகாரத்தை கையில் எடுத்து அரசியல் செய்யத் துவங்கியது. இதைவைத்து தமிழக அரசியலில் சலசலப்பை ஏற்படுத்தலாமென திட்டமிட்டது. டெல்லி தலைமை அறிவுறுத்தல்படி, இதுதொடர்பான போராட்டங்கள் தமிழ்நாடு முழுவதும் முன்னெடுக்கப்பட்டது. பாஜ மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், மூத்த தலைவர் எச்.ராஜா உள்ளிட்ட பலர் மதுரை வந்து மறியல் போராட்டங்களில் ஈடுபட்டனர்.

ஆனால், திருப்பரங்குன்றம் பகுதியிலோ, மதுரை மாவட்ட அளவிலோ பாஜ முன்னெடுப்பிற்கு போதுமான ஆதரவு கிடைக்கவில்லை. குறிப்பாக, உளளூரில் இருந்த பொதுமக்கள், பாஜ கட்சியினரின் போராட்டங்களை நிராகரித்து விட்டனர். பாஜ அழைப்பு விடுத்த கடையடைப்புப் போராட்டமும் பிசுபிசுத்து விட்டது. திருப்பரங்குன்றத்துக்கு வெளியூர்களில் இருந்து வந்த பாஜவினர் மட்டுமே போராட்டத்தில் ஈடுபட்டனர். அமைதியான முறையில் நடக்கும் திருவிழாவை தேவையற்ற முறையில் கலவரமாக்க முயற்சிப்பதையும் திருப்பரங்குன்றம் பகுதியினரும், மதுரை மாவட்ட மக்களும் விரும்பவில்லை.

மதுரை மக்கள் எப்போதும் மத ஒற்றுமையை வலியுறுத்தியே வாழ்ந்து வருகின்றனர். திருப்பரங்குன்றம் தீப விவகாரத்தை பாஜ மற்றும் இந்து அமைப்பினர் எதிர்கொண்டவிதமும் மதுரை மக்களால் நிராகரிக்கப்பட்டது. இது தெரியாமல், திருப்பரங்குன்றம் விவகாரம் தங்களுக்கு சாதகமாக இருக்கும் என நினைத்து பாஜவினரும் திருப்பரங்குன்றம் தொகுதி தங்களுக்கு வேண்டும் என கட்டாய பட்டியலில் வைத்திருந்தனர். இதற்கான முன்னெடுப்பையும் எடுத்தனர். கிட்டத்தட்ட வேட்பாளர் வரை இறுதி செய்திருந்ததாக கூறப்பட்டது.

இதற்காக கடந்த 1ம் தேதி மதுரை வந்த பிரதமர் மோடி திருப்பரங்குன்றம் முருகன் கோயிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார். திருப்பரங்குன்றம் எங்களுக்கு தான்; இதை உறுதிப்படுத்தும் விதமாகத் தான் மோடியே திருப்பரங்குன்றம் கோயிலுக்கு வந்தார் எனக் கூறி தேர்தல் பணிகளை மதுரை பாஜவினர் முன்னெடுத்தனர். இதனால், அதிமுகவின் சிட்டிங் தொகுதியை கைப்பற்ற பாஜ நினைக்கிறது என்றெல்லாம் பேச்சு எழுந்தது. ஆனால், திருப்பரங்குன்றம் விவகாரத்தால் பாஜவிற்கு எதிரான மன நிலையே உள்ளூர் மக்களிடம் நிலவியது. அங்கிருந்த சகஜ நிலை பாதிக்கப்பட்டதால் மக்கள் பாஜ மீது கடும் அதிருப்தி அடைந்துள்ளனர். இந்த தொகுதியில் போட்டியிட்டால் கூட்டணி கட்சிகளின் வாக்குகள் கூட முழுமையாக கிடைக்காது.

மிக மோசமான தோல்வியை சந்திக்க வேண்டி வரும். மேலும், அதிமுக சிட்டிங் எம்எல்ஏ தொகுதி என்பதால், நம்மை தோற்கடிக்க அவரது ஆதரவாளர்கள் திட்டமிடுவார்கள் என ஒன்றிய உளவு அமைப்பு பாஜ தலைமைக்கு ரிப்போர்ட் கொடுத்தது. இதன்பிறகே திருப்பரங்குன்றம் கட்டாயம் வேண்டும் எனக் கூறிய பாஜ கடைசி நேரத்தில் பின்வாங்கியது. இதனால்தான் திருப்பரங்குன்றம் ெதாகுதியில் மீண்டும் அதிமுக போட்டியிடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இன்னும் சொல்லப் போனால், திருச்செந்தூர் தவிர்த்து வேறு முருகனின் அறுபடை வீடுகள் உள்ள எந்தத் தொகுதியிலும் பாஜ போட்டியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

* வேட்பாளர்களே அறிவிக்காமல் ராமதாஸ் தேர்தல் அறிக்கை: இலவச மடிக்கணினி, மிதிவண்டிகள்; 101 பக்கங்களில் 74 அறிவிப்புகள்
தந்தை, மகன் மோதலையடுத்து பாமக இரண்டாக உடைந்த நிலையில், அன்புமணி தலைமையிலான பாமக பாஜ, அதிமுகவின் என்.டி.ஏ. கூட்டணியில் இணைந்தது. இதில் பாமகவுக்கு 18 தொகுதிகள ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையிலான பாமகவை, திமுக, அதிமுக, தவெக என எந்த அணியிலும் சேர்க்கவில்லை. தனித்து விடப்பட்ட அவரை தைலாபுரம் தோட்டத்தில் சசிகலா சந்தித்து பேசினார். இதையடுத்து சசிகலா தொடங்கிய அஇபுதமமுக கட்சியுடன் ராமதாஸ் கட்சி இணைந்து புதிய கூட்டணியை உருவாக்கி தேர்தலை சந்திப்பது என முடிவானது. ஆனால் தொகுதி பங்கீடு, யார், யார் வேட்பாளர் என முடிவு செய்யப்படவில்லை. சசிகலா கட்சியில் புதுச்சேரியில் மட்டும் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர். ராமதாஸ் தரப்பில் இதுவரை வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படவில்லை.

இந்த நிலையில் விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே தைலாபுரம் தோட்டத்தில் பாமகவின் தேர்தல் அறிக்கையை நிறுவனர் ராமதாஸ் நேற்று வெளியிட்டார். அப்போது அவர், உங்களுக்காக பாமக தொடர்ந்து போராடும், வேட்பாளர் பட்டியல் விரைவில் வெளியிடப்படும். கூட்டணிக் கட்சித்தலைவர் சசிகலாவுடன் பேசி எத்தனை தொகுதியில் போட்டியிடுவது என்பது குறித்து முடிவெடுக்கப்படும், என்றார். தேர்தல் அறிக்கை 101 பக்கங்களில் 74 அறிவிப்புகள் இடம் பெற்றுள்ளது. அதில், கல்வி மாநில பட்டியலுக்கு கொண்டுவர நடவடிக்கை மேற்கொள்ளப்படும், 9 முதல் 12 ஆம் வகுப்பு வரை மாணவ, மாணவிகளுக்கு கட்டணமில்லா மடிக்கணினியும், மிதிவண்டியும் வழங்கப்படும்.

மாவட்டத்திற்கு ஒரு வேளாண் கல்லூரி மற்றும் தர்மபுரி, விழுப்புரம், தஞ்சாவூர், திருநெல்வேலி ஆகிய நான்கு இடங்களில் புதிய வேளாண் பல்கலைக் கழகங்கள் உருவாக்கப்படும். 4 இடங்களில் புதிய கால்நடை மருத்துவக் கல்லூரிகள் துவங்கப்படும். கல்விக் கடன் முழுவதும் தள்ளுபடி செய்யப்படும். வீட்டுக்கு ஒருவருக்கு வேலைவாய்ப்பு, வேலையில்லா பட்டதாரிகளுக்கு சுய தொழில் மானியத்துடன் தொடங்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும், விதவைப் பெண்களின் மறுமணத்தை ஊக்கப்படுத்தி உதவித்தொகை வழங்கப்படும். 60 வயதுக்கு மேற்பட்ட நெசவாளர்களுக்கு ஓய்வூதியம் வழங்கப்படும். நெசவுத் தொழிலில் நலிவுற்றவர்களை காக்க நெசவாளர்கள் பெற்ற கடன் தள்ளுபடி செய்யப்படும் உட்பட 74 அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.

Related Stories: